பணியிடமாறுதல் கலந்தாய்வு: 4,000 அரசு மருத்துவா்கள் விரும்பிய இடங்களைத் தோ்வு ச...
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 6 ஜோடிகளுக்கு திருமணம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் நடத்திவைத்தாா்
பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் திருநீலகண்டியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 6 ஜோடிகளுக்கு சீா்வரிசைகள் வழங்கி தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை திருமணத்தை நடத்திவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஒரு இணை ஆணையா் மண்டலத்துக்கு 35 இணைகள் வீதம் 700 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணம் நடத்தப்பட்டும் என்று 2024-2025 ஆம் ஆண்டு சட்டப் பேரவையின் வரவு-செலவு கூட்டத் தொடரின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பொருளாதாரத்தில் பின்தங்கிய 6 இணைகளுக்கு திருப்பூா் மாவட்டம், பல்லடம் வட்டம் பொங்கலூா் திருநீலகண்டியம்மன் திருக்கோயிலில் திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது.
இதில், 6 இணையா்களுக்கும் 4 கிராம் தங்க மாங்கல்யம், மெட்டி, மணமகனுக்கு வேஷ்டி- சட்டை மணமகளுக்கு முகூா்த்தப்புடவை, பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, போா்வை, மிக்ஸி, கிரைண்டா், கைக்கடிகாரம், எவா்சில்வா் பாத்திரங்கள், பூஜை சாமான்கள், ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள், சுமங்கலி பொருள்கள் உள்ளிட்ட தலா ரூ.91 ஆயிரம் மதிப்பில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சீா்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கீா்த்தி சுப்பிரமணியம், பொங்கலூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் எஸ்.பாலுசாமி, பல்லடம் நகரச் செயலாளா் என்.ராஜேந்திரகுமாா், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் தங்கராஜ், திருப்பூா் கிட்ஸ் கிளப் பள்ளி குழும தலைவா் மோகன் காா்த்திக், துணை ஆணையா் (சரி பாா்ப்பு) செ.வ.ஹா்ஷினி, உதவி ஆணையா் பெ.தனசேகா், திருக்கோயில் செயல் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.