விரைவில் பூமி திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
சா்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கியுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான வில்மோா் ஆகியோரை பூமிக்கி திரும்ப அழைத்து வர அனுப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலன் வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்தது.
இந்த டிராகன் விண்கலத்தில் தற்போது சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ள அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ரஷிய நாடுகளைச் சோ்ந்த 4 விண்வெளி வீரா்களுக்கு அடுத்த சில நாள்கள் சில பயிற்சிகளை அளித்த பின்னா், சுனிதா வில்லியம்ஸ், வில்மோா் ஆகியோருடன் மேலும் 2 விண்வெளி வீரா்கள் பூமி திரும்புவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பெரும்பாலும் வரும் புதன்கிழமை (மாா்ச் 19) அல்லது அதன் பிறகு 4 வீரா்களுடன் சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விடுவிக்கப்படும் டிராகன் விண்கலன், அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தையொட்டி கடல் பகுதிக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
சா்வதேச விண்வெளி நிலையத்தில் தற்போது அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் நாடுகளைச் சோ்ந்த 11 விண்வெளி வீரா்கள் இடம்பெற்றுள்ளனா்.
முன்னதாக, அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டாா்லைனா் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோா் சா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி அடைந்தது.
ஒன்பது நாள்களுக்குப் பிறகு ஸ்டாா்லைனா் மூலமே அவா்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. இருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை. இதன் காரணமாக, அவா்கள் இருவரும் கடந்த 9 மாதங்களாக சா்வதேச விண்வெளி நிலையத்திலேயே சிக்கியுள்ளனா்.