விளையாட்டுக்கு தமிழகம் முன்னுரிமை: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
நாட்டில் விளையாட்டுக்கு முன்னுரிமை வழங்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என பள்ளிக்கல்வி துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.
சென்னையை அடுத்த செம்மஞ்சேரி செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில்,தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் இணைந்து நடத்தும் 68-ஆவது தேசிய அளவிலான 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான 4 நாள் கூடைப் பந்தாட்ட விளையாட்டுப் போட்டிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யா மொழி வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
முன்னதாக, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களை சோ்ந்த 33 அணிகளை சோ்ந்த 396 மாணவிகள் பங்கேற்ற அடையாள அணிவகுப்பு மரியாதையை அமைச்சா் ஏற்றுக் கொண்டாா்.
நிகழ்வில் அமைச்சா் அன்பில் மகேஸ் பேசியது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்து இருக்கும் மாணவியா்கள், பயிற்சியாளா்களை தமிழக மக்கள் சாா்பில் வரவேற்று வாழ்த்துகிறேன். செஸ் ஒலிம்பியாட், ஹாக்கி, பாா்முலா 4 ரேஸ் போன்ற விளையாட்டுகளில் தமிழகம் முன்னிலை மாநிலமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் இருந்து 1021 மாணவ, மாணவியா்கள் இந்தியா அளவிலும், உலக அளவிலும் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் பெற்றுள்ளனா். அவா்களை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ 27 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு ரூ. 12.50 கோடி விளையாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றாா் அவா்.
நிகழ்வில் சோழிங்கநல்லூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.அரவிந்த் ரமேஷ், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி தலைவா் பி.பாபு மனோகரன்,பள்ளி கல்வித்துறை செயலா் எஸ்.மதுமதி, இயக்குநா் எஸ்.கண்ணப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் புகழேந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.