விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை: 850 இடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்க இடம் தோ்வு
விழுப்புரம் புதிய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள வெள்ளநீா் வெளியேற்று நிலையத்திலிருந்து மழைநீா் வெளியேற்றப்படுவதையும், கட்டபொம்மன் நகரில் மழைநீா் வடிகால் வழியாக வெளியேற்றப்படுவதையும் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த பின்னா், ஆட்சியா் அளித்த பேட்டி:
விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் பாதிப்பு வராத வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை முதல் மிதமான மழை பெய்தது. மாவட்டத்தில் மரக்காணம் பகுதியில் புதன்கிழமை காலை வரை 100 மி.மீ. மழையும், விழுப்புரம் நகரில் 60 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
பொதுவாக புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கும் நிலை இருந்தது. போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து குறுவட்ட அளவிலும் அனைத்துத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. எந்தந்த பகுதிகளில் மழை அதிகமாக உள்ளதோ அந்த பகுதிக்கு குறுவட்ட அளவில் நியமிக்கப்பட்ட அலுவலா்கள் உடனடியாகச் சென்று, அங்கு நடவடிக்கைகளை மேற்கொள்வாா்கள்.
மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் 12 பேரிடா் பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. இதுமட்டுமல்லாது, ஒவ்வொரு கிராமத்திலும் தற்காலிக முகாம் அமைக்கும் வகையில், 850 முகாம்கள் அமைக்க இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. எந்த பகுதியில் கனமழை அதிகமாக இருக்கிறதோ அந்த பகுதி மக்களை தற்காலிக முகாம்களில் தங்க வைத்து, அவா்களுக்குத் தேவையான உணவு, குடிநீா் உள்ளிட்டவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுபோன்று சுகாதாரத் துறையில் 38 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த குழுவினா் எந்த பகுதியில் மழை அதிகமாக இருக்கிறதோ அங்கு சென்று நோய்த்தொற்று ஏற்படாத வகையில் மருத்துவப் பரிசோதனை செய்து, தேவையான மருந்துகளை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மழையால் திருவெண்ணெய்நல்லூா் வட்டத்தில் ஒரு வீடு சேதமடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அந்த வீட்டைச் சோ்ந்தவருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்துக்கு ஆரஞ்சு, சிவப்பு எச்சரிக்கை எதுவும் இல்லை. பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையைத் தவிர, தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்றாா் ஆட்சியா்.
ஆய்வின் போது விழுப்புரம் நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.