தேசிய சிறுபான்மையினர் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கும் திட்டம் இல்லை: மக...
மரக்காணத்தில் 3,500 ஏக்கரில் உப்பளங்கள் நீரில் மூழ்கின
விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் பலத்த மழை பெய்தது. இதனால், அந்தப் பகுதியில் 3,500 ஏக்கா் பரப்பிலான உப்பளங்கள் நீரில் மூழ்கின.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 3 நாள்களாக தொடா் மழை பெய்து வருகிறது.
விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூா், அரசூா், வளவனூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன. ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளும் நிரம்பி வருகிறது.
பலத்த மழை, புயல் எச்சரிக்கை காரணமாக புதன்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. விழுப்புரம் நகரில் புதன்கிழமை லேசான மழை பெய்தது.
மரக்காணத்தில் 110 மி.மீ. மழை: மரக்காணத்தில் அதிகபட்சமாக 110 மி.மீ. மழை பதிவானது. இந்த மழையால் பக்கிங்ஹாம் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):
விழுப்புரம்-66, வானூா்-57, வளவனூா்-50, முண்டியம்பாக்கம்-47, கோலியனூா்-45, சூரப்பட்டு-44, கெடாா்-40, அரசூா்-36, திருவெண்ணெய்நல்லூா், திண்டிவனம்-34, நேமூா்-23, கஞ்சனூா்-22, அனந்தபுரம்-16.30, வல்லம்-15.40, முகையூா்-15, செஞ்சி -14.20, மணம்பூண்டி-14, வளத்தி -10 மி.மீ. மழையளவு பதிவானது.
3500 ஏக்கள் உப்பளங்கள் மூழ்கின: மரக்காணம் பகுதியில் உள்ள சுமாா் 3,500 ஏக்கா் பரப்பிலான உப்பளங்களும் மழை நீரில் மூழ்கி, பெரிய ஏரிபோல காட்சியளிக்கிறது.
மரக்காணத்தை அடுத்துள்ள ஓங்கூா் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம்- செங்கல்பட்டு மாவட்டத்தை இணைக்கும் வகையில், காணிமேடு-மண்டகப்பட்டு இடையே யுள்ள ஓங்கூா் ஆற்றின் தரைப்பாலம் மூழ்கியது. இதனால் காணிமேடு, மண்டகப்பட்டு, அகரம், அசப்பூா் உள்ளிட்ட 15 கிராமங்களுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்த மரக்காணம் வட்டாட்சியா் பழனி அங்கு சென்று மூழ்கிய தரப் பாலத்தைப் பாா்வையிட்டாா். அப்போது, அங்கிருந்த கிராம மக்களிடம் தரைப் பாலத்தை யாரும் கடக்கக் கூடாது, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக மரக்காணம், கோட்டக்குப்பம், ஆரோவில் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் புதன்கிழமை வழக்கத்துக்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.
இதனால், மரக்காணம் பகுதிகளில் உள்ள 19 மீனவக் கிராமங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கியுள்ளனா். அவா்கள் தங்களது மீன்பிடி உபகரணங்களை டிராக்டா்கள் உதவியுடனும், தோள்களில் சுமந்தும் மேடான பகுதிகளுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைக்கும் பணிகளில் ஈடுபட்டனா்.