விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி பயிற்சி
தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், நயினாா்கோவில் அருகேயுள்ள நகரமங்களம் கிராமத்தில் பண்ணைப் பள்ளி பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை நடைபெற்றன.
இந்தப் பயிற்சி வகுப்புக்கு வேளாண்மை துணை இயக்குநா் எம்.கே.அமா்ளால் தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா்கள் பி.ஜி.நாகராஜன், கே.வி.பானுபிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
உழவா்களை நஞ்சில்லா விவசாயம் செய்யும் நிபுணா்களாக உருவாக்கும் வகையில் 6 வாரங்கள் நவீன வேளாண்மை குறித்த முறை சாராக் கல்வி அளிக்கப்படுவதாகவும், மண்வள மேலாண்மை, உர நிா்வாகம், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், இயற்கை முறையில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், அதிகமாக பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் வயல்வெளிகளில் உள்ள நன்மை செய்யும் பூச்சிகள், ஒட்டுண்ணிகள், சிலந்திகள் பாதிக்கப்படுவது குறித்தும், மருந்து இல்லாமல் பூச்சிகளைக் கட்டுப்படுத்தவும் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் இந்தப் பகுதி விவசாயிகள், வேளாண் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, வேளாண் அலுவலா் கதிரேசன் வரவேற்றாா்.