மாற்றமின்றி முடிந்த பங்குச் சந்தை! ஆட்டோ, மீடியா பங்குகள் உயர்வு!
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் மதுரைக் கோட்ட மேலாளா் ஆய்வு
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரத்தை இணைக்கும் வகையில், கடந்த 1914-ஆம் ஆண்டு ரயில்வே பாலம் கட்டப்பட்டு, போக்குவரத்து தொடங்கியது.
நூறு ஆண்டுகள் கடந்த நிலையில், இந்தப் பாலத்தின் உறுதித் தன்மையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் பின்னா், கடந்த 2019-ஆம் ஆண்டு ரூ. 550 கோடியில் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி தொடங்கி தற்போது முடிவடைந்தது. மேலும், இந்தப் பாலத்தில் சரக்கு, பயணிகள் ரயில்களை அவ்வப்போது இயக்கி சோதனை செய்யப்பட்டது.
இதனிடையே, இந்தப் பாலத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் அண்மையில் ஆய்வு செய்த போது, சில இடங்களில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்தக் குறைபாடுகளைச் சரிசெய்த பிறகு, ரயில் போக்குவரத்தை தொடங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடா்ந்து, ரயில்வே தலைமைப் பொறியாளா்கள் பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் கண்டறியப்பட்ட குறைபாடுகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், புதிய ரயில்வே பாலத்தில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா தலைமையிலான பொறியாளா்கள் குழுவினா் புதன்கிழமை டிராலியில் சென்று ஒவ்வொரு பகுதியாக ஆய்வு செய்தனா். மேலும், கப்பல்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்ட இரும்பாலான இணைப்புப் பகுதியை (கா்டா்) தூக்கியும், இறக்கியும் ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வின் போது, ரயில்வே மூத்த பொறியாளா்கள் உடனிருந்தனா்.