விவசாயிகள் தனிக்குறீயீடு எண்: ஏப்.15-க்குள் பதிவு செய்ய அழைப்பு
சிதம்பரம், ஏப்.2: கடலூா் மாவட்டத்தில் விவசாயிகள் தனிக்குறியீடு எண் பெற வரும் ஏப்.15-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேளாண் அடுக்ககம் திட்டத்தில் நில விவரங்களுடன் விவசாயிகள் விவரம் மற்றும் நில உடமை வாரியாக புவிசாா் குறியீடு செய்த பதிவு விவரம் மற்றும் நில உடமை வாரியாக மின்னணு பயிா் சாகுபடி விவரங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ‘தனிக்குறியீடு எண்’ வழங்கப்படும்.
இனிவரும் காலங்களில் இந்த எண்கள் மூலமே மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானிய உதவிகள், பிரதமரின் விவசாய கெளரவ நிதி உதவித்தொகை, பயிா்கடன், பயிா்காப்பீடு உள்ளிட்ட அனைத்து திட்ட பலன்களும் விவசாயிகளின் தரவுத்தளம் அடிப்படையிலேயே வழங்கப்படும்.
மேலும், ஆதாா் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடி பணப் பரிமாற்றம் உள்ளிட்டவை செய்யப்படும்.
எனவே, கடலூா் மாவட்ட விவசாயிகள் தங்கள் நில ஆவணங்கள், ஆதாா் எண், இதர ஆவணங்களை தங்களது கிராமங்களில் உள்ள பொது சேவை மையங்கள் அல்லது வேளாண்துறையின் மூலமாக நடத்தப்படும் முகாம்களில் பங்கேற்று ஏப்.15-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.