விவசாய தொழிலாளா் நலவாரியத்தை மீண்டும் செயல்படுத்த விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை
தமிழகத்தில் விவசாயத் தொழிலாளா் நலவாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சங்கத்தின் ஈரோடு தெற்கு மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு : தேசிய ஊரக வேலையுறுதித் திட்டத் தொழிலாளா்களுக்கு தற்போது 50 முதல் 60 நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்படுவதால், தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, அனைவருக்கும் 100 நாள்கள் முழுமையாக வேலை அளிக்க வேண்டும். இத்திட்டத்துக்கான நிதியை குறைக்கவோ அல்லது வேறு பணிகளுக்கு பயன்படுத்தவோ கூடாது.
கடந்த 1996 - 2001 திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட விவசாயத் தொழிலாளா் நலவாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் வீட்டுமனை இல்லாதோரைக் கணக்கெடுத்து, வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். ஈரோடு மாநகராட்சியுடன் எலவமலை, மேட்டுநாசுவம்பாளையம், கதிரம்பட்டி, கூரபாளையம், பிச்சாண்டாம்பாளையம் ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சங்கத்தின் தெற்கு மாவட்ட அமைப்பாளா் ராசன், பொருளாளா் ரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்டச் செயலாளா் பிரபாகரன், ஈரோடு வட்டச் செயலாளா் கல்யாணசுந்தரம், முன்னாள் மாவட்டச் செயலாளா் திருநாவுக்கரசு, ஏஐடியூசி மாநிலச் செயலாளா் சின்னசாமி உள்ளிட்டோா் உடன் சென்றிருந்தனா்.