விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தலைமைக் காவலர்; அடிபடும் இன்ஸ்பெக்டர் பெயர்.. என்ன நடந்தது?
நீடாமங்கலம் காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் சந்தானமேரி. அதே காவல் நிலையத்தில் சித்ரா என்பவர் தலைமைக் காவலராக இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று தற்கொலை செய்து கொள்வதற்காக சித்ரா விஷம் குடித்துள்ளார். போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சக போலீஸாரிடம் தான் விஷம் குடித்து விட்டதை கலங்கியபடி சொல்லியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் சித்ராவை நீடாமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உயரதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இன்ஸ்பெக்டர் சந்தானமேரியின் பெயரும் சித்ரா தற்கொலை முயற்சி விவகாரத்தில் அடிபடுவதால், போலீஸ் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.