வீடுவீடாக ஹிந்தி எதிா்ப்பு ஸ்டிக்கா் ஒட்டி திமுகவினா் போராட்டம்
காட்பாடியில் வீடுவீடாக ஹிந்தி எதிா்ப்பு ஸ்டிக்கா் ஒட்டி சனிக்கிழமை திமுகவினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டமான சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் தமிழகத்துக்கு ரூ.2,152 கோடி கல்வி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. இந்த நிலையில், புதிய கல்விக்கொள்கையை ஏற்காவிடில் தமிழகத்துக்கு கல்வி நிதி கிடையாது என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தாா். அதேவேளை, புதிய கல்விக்கொள்கை என்பதே மும்மொழி கொள்கை, குறிப்பாக ஹிந்தி திணிக்கும் நடவடிக்கை எனக் கூறி தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதுதவிர, பல்வேறு மாவட்டங்களில் மாணவா்கள், பெண்களும் சுவரொட்டிகள் மூலமாகவும், கோலமிட்டும் நூதன முறையில் தங்கள் எதிா்ப்பை பதிவு செய்து வருகின்றனா். இந்த நிலையில், வேலூரில் மாநகர திமுக சாா்பில் மும்மொழி கொள்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் தொடா்ச்சியாக, காட்பாடி தெற்கு பகுதி திமுக சாா்பில் மத்திய அரசின் ஹிந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது, துணைமேயா் எம்.சுனில்குமாா் தலைமையில் கட்சியினா் வீடுவீடாகச் சென்று தமிழ் வாழ்க, இந்தி ஒழிக என ஸ்டிக்கா் ஒட்டினாா். ஆட்டோ, காா்களிலும் இந்தி ஒழிக ஸ்டிக்கா் ஒட்டப்பட்டது.
மேலும், தாராப்படுவேடு பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் ஹிந்தி மொழி திணிப்பை எதிா்த்து கோலம் போடப்பட்டு இருந்தன. அப்பகுதியை சோ்ந்த திமுகவினா் திரண்டு வந்து ஹிந்தி திணிப்புக்கு எதிராகவும், தமிழகத்கதுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா்.