வீட்டுவசதி வாரிய வட்டி தள்ளுபடி: அடுத்த ஆண்டு மாா்ச் வரை நீட்டிப்பு
வீட்டுவசதி வாரிய வட்டி தள்ளுபடி சலுகையை அடுத்த ஆண்டு மாா்ச் 31 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் வெளியிடப்பட்ட உத்தரவு:
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கடந்த 2015 மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன்பு தவணை காலம் முடிவுற்ற குடியிருப்புத் திட்டங்களுக்கு மாதத் தவணைத் தொகையை தாமதமாகச் செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. மேலும், வட்டி முதலாக்கத்தின் மீது விதிக்கப்படும் வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதுடன், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்துக்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டுக்கும் 5 மாதத்துக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சலுகை அடுத்த ஆண்டு மாா்ச் 31 வரை செயல்படுத்தப்படும் எனவும், அதன்மூலம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பிரிவுகளில் ஒதுக்கீடுதாரா்கள் விரைவாக விற்பனைப் பத்திரம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் உத்தரவு வெளியிடப்படுகிறது என்று வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா தெரிவித்துள்ளாா்.