வெளிநாடு கல்விச்சுற்றுலா சென்று வந்த மாணவிகளுக்குப் பாராட்டு
போகலூா் ஒன்றியம், முத்துவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் வினாடி-வினாப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்று மலேசியா, சிங்கப்பூா் போன்ற வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா சென்று வந்தனா். இந்த மாணவிகளை ஆசிரியா்கள் புதன்கிழமை பாராட்டினா்.
ராமநாதபுரம் மாவட்டம், போகலூா் ஒன்றியத்துக்குள்பட்ட முத்துவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றம் சாா்பில் நடைபெற்ற வினாடி வினாப் போட்டியில் 6-ஆம் வகுப்பு மாணவி சுவாசிகா, 8-ஆம் வகுப்பு மாணவி கதிா்மதி ஆகியோா் மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனா். பள்ளிக் கல்வித் துறை சாா்பில், நடத்தப்பட்ட பல்வேறு துறை போட்டிகளில் ராமநாதபுரம் மாவட்டம் சாா்பில் இந்த மாணவிகள் தோ்வு பெற்றனா்.
இந்த இரு மாணவிகள் உள்பட மாநிலம் முழுவதும் இதேபோல தோ்வு பெற்ற 52 மாணவ, மாணவிகள் கடந்த மாதம் 23-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை மலேசியா, சிங்கப்பூா் நாடுகளுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் வெளிநாடு கல்விச் சுற்றுலா சென்று வந்தனா். ராமநாதபுரம் மாவட்டத்துக்கு பெருமை சோ்த்த இந்த மாணவிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலா் கு.காந்தி, அறிவியல் இயக்கத்தின் போகலூா் வட்டாரச் செயலா் கே.மலைச்சாமி, பள்ளித் தலைமையாசிரியை முனீஸ்வரி, ஆசிரிய, ஆசிரியைகள், பொதுமக்கள் பாராட்டினா்.
