வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் உத்தரவு
அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் படங்களுக்கு 100 சதவிகிதம் வரி விதிக்கும் நடைமுறையைத் தொடங்க அந்நாட்டு வணிகத் துறைக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதனால், அமெரிக்காவில் திரையரங்குகளில் வெளியாகும் இந்தியா, கொரியா உள்பட பிற நாடுகளின் படங்களுக்கான டிக்கெட் கட்டணம் அதிகரிக்கும் சூழல் எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றத்தில் இருந்து வெளிநாட்டு பொருள்கள் இறக்குமதிக்கு எதிராக வரி உயர்வு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்.
டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு எதிராக, சர்வதேச வர்த்தகப் போர் தொடங்கியிருப்பதாக பிற நாட்டுத் தலைவர்கள் விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களை குறிவைத்து வரியை உயர்த்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, ட்ரூத் சோசியல் சமூக ஊடகப் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“அமெரிக்காவின் திரைத்துறை மற்றும் ஹாலிவுட் மிக வேகமாக பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மற்ற நாடுகள் திரைப்படங்களை அமெரிக்காவில் தயாரிப்பதை முடக்க அனைத்து வகையான சலுகைகளையும் வழங்குகின்றனர். இது மற்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சியாக இருக்கிறது. எனவே, இது தேசிய பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.
அனைத்துக்கும் மேலாக வெளிநாட்டுப் படங்கள் பிரசார பாணியில் எடுக்கப்படுகின்றன. எனவே, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, நமது நாட்டில் திரையிடப்படும் அனைத்து படங்களுக்கும் 100 சதவிகிதம் வரி விதிக்கும் நடைமுறையை உடனடியாகத் தொடங்க வணிகத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
நமது நாட்டிற்குள் வரும் வெளிநாட்டுத் திரைப்படங்கள் அனைத்திற்கும் 100% வரி விதிக்கும் செயல்முறையை உடனடியாகத் தொடங்க வணிகத் துறைக்கும், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிக்கும் நான் அதிகாரம் அளிக்கிறேன். எங்களுக்கு மீண்டும் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் படங்கள் வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.