வெள்ளத் தடுப்புச்சுவரை அகற்ற எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்
அவிநாசி அருகேயுள்ள ஸ்ரீ சாய் காா்டன் குடியிருப்புப் பகுதியில் வெள்ளத் தடுப்புச்சுவரை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து அவா்கள் கூறியதாவது: அவிநாசி அருகே செம்பியநல்லூா் ஊராட்சிக்குள்பட்ட ஸ்ரீ சாய் காா்டன் குடியிருப்புப் பகுதியில் குடிநீா், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதனால், பெரும் அவதியடைந்து வருகிறோம்.
எங்களது குடியிருப்புகள் பள்ளமான பகுதியில் உள்ளதால் மழை காலங்களில் வெள்ளம் புகுந்துவிடக் கூடாது என்பதற்காக 6 அடி உயரமுள்ள வெள்ளத் தடுப்புச் சுவரை அமைத்துள்ளோம்.
இந்நிலையில், அருகே உள்ள தனியாா் நில உரிமையாளா்கள் சிலா் இந்தச் சுவரை இடித்து அணுகு சாலையாகப் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா். இந்தச் சுவா் இடிக்கப்பட்டால் மழை காலங்களில் எங்களது குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்துவிடும். ஆகவே, வெள்ளத் தடுப்புச் சுவரை அகற்றக் கூடாது. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊராட்சி நிா்வாகத்தினா், வருவாய்த் துறையினா், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.