ஆபரேஷன் கொங்கு: ஆட்டத்தை ஆரம்பித்த செந்தில் பாலாஜி; கோவை திமுக மாநகர் மாவட்ட செய...
``பீர்க்கங்காயும் அதன் தோலும்'' - மருத்துவ பலன்கள் சொல்லும் நிபுணர்!
''பார்க்க கரடு முரடாக இருந்தாலும் சுவையிலும், அது தரும் ஆரோக்கியத்திலும் பீர்க்கங்காயை அடித்துக்கொள்ள முடியாது.
நீர்ச்சத்து நிறைந்தவை என்பதால், கோடைக்காலத்தில் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்க, இதை வாரத்தில் மூன்று நாள்கூட சாப்பிடலாம். பீர்க்கங்காயின் தோலில் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், அதையும் தவிர்க்க வேண்டாம். அது துவர்ப்புத் தன்மை நிறைந்தது என்பதால், சமையலில் அப்படியே பயன்படுத்த முடியாது. துவையலாக செய்து சாப்பிடலாம்'' என்கிற டயட்டீஷியன் அம்பிகா சேகர், பீர்க்கங்காயின் மருத்துவ குணங்களையும், அதன் தோலை எப்படி துவையல் செய்வது என்பதையும் விளக்குகிறார்.

• பீர்க்கங்காயில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால், வாழ்வியல் நோய்களான சர்க்கரைநோய், இதய பாதிப்பு உள்ளவர்களுக்கும்கூட மிகவும் நல்லது. தவிர, உடலில் தாது உப்புக்களின் சமநிலையின்மை ஏற்படாமல் தடுத்து, உடலை தேவையான நீர்ச்சத்துடன் பராமரிக்கும்.
• இதிலுள்ள வைட்டமின் பி, சி செரிமானத்தை எளிதாக்கும்.
• குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு பீர்க்கங்காய் மிகவும் நல்லது. காய்கறி சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, பருப்புடன் சேர்த்து வேகவைத்து, மசித்துக் கொடுக்கலாம்.
• பீர்க்கங்காயின் சுவைக்காக சிலர் அதை ஊறுகாயாகச் செய்து சாப்பிடுவதுண்டு. ஊறுகாயாகச் சாப்பிடும்போது சத்துகள் அனைத்தும் கிடைக்கப்பெற்றாலும்கூட, கலோரிகள் அதிகரிக்கும். இதனால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கலாம். எனவே உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் இதைத் தவிர்க்க வேண்டும். ஆனால், அவர்களும் பீர்க்கங்காய்த் தோல் துவையலைச் சாப்பிடலாம்.

• சிறந்த ஆன்டிஆக்ஸிடன்டாக இது செயல்படும் என்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். புற்றுநோய் பாதித்தவர்களும், அதிலிருந்து மீண்டுகொண்டிருப்பவர்களும்கூடத் தயக்கமின்றி இதைச் சாப்பிடலாம்.
• கர்ப்ப காலத்தில் வாந்தி உணர்வு ஏற்படுபவர்கள், பீர்க்கங்காயைத் தவிர்ப்பது நல்லது.
• சர்க்கரைநோய் பாதிப்பு தீவிரமாக இருப்பவர்களுக்கு, உணவில் உப்பு குறைவாகப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுவதுண்டு. ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ எனப் பழகியவர்களுக்கு, உப்பு குறைவாகச் சாப்பிடுவது அதிக சிரமத்தைக் கொடுக்கும். மனதளவில், முழுமையாகச் சாப்பிட்ட திருப்தியே அவர்களுக்கு ஏற்படாது.
ஆனால், பீர்க்கங்காய்த் தோல் ரெசிபியில் இந்தப் பிரச்னை கிடையாது. காரணம், பீர்க்கங்காயின் தோல் பகுதி உப்புச்சுவை கொண்டது. அதனால், ரெசிபியில் உப்பு குறைவாகச் சேர்த்தாலும் மாற்றம் எதுவும் தெரியாது.

தேவையானவை:
பீர்க்கங்காய்த் தோல்: ஒரு கப்
உளுத்தம்பருப்பு: ஒரு டேபிள்ஸ்பூன்
தனியா: அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்: 4
தேங்காய்த்துருவல்: ஒரு டீஸ்பூன்
புளி: எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை மற்றும் உப்பு : தேவையான அளவு
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், தனியா, உளுத்தம்பருப்பு, பீர்க்கங்காய்த் தோல் சேர்த்து வதக்க வேண்டும். வதங்கும்போதே, அதில் தேவையான அளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
தோல் நன்கு வதங்கியதும் புளி, துருவிய தேங்காயைச் சேர்த்து அரைக்க வேண்டும். அரைக்கும்போது, குறைந்த அளவே தண்ணீர் பயன்படுத்தவும். பீர்க்கங்காய் தோல் துவையலில், பீர்க்கங்காயின் தோல் பகுதியை மட்டுமே வதக்குவதால், அதிலுள்ள அனைத்துச் சத்துகளும் அழியாமல் முழுமையாகக் கிடைக்கும்.
பீர்க்கங்காய் ஃப்ரெஷ்ஷாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்து வாங்குங்கள். அடர் பச்சை நிறத்திலுள்ள காயை வாங்குவது சிறப்பு.
சில காய்களில், அடிப்பகுதி மட்டும் அடர்த்தியாக இருக்கும். அப்படியில்லாமல், காய் முழுவதும் ஒரே அளவில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்.
காயின் மேலுள்ள நரம்புகளின் நிறத்தைப் பார்த்து வாங்க வேண்டும். அது வெள்ளைப் புள்ளிகளுடன் இருந்தாலோ, காயின் காம்புப் பகுதி வறண்டிருந்தாலோ அந்தக் காய் முற்றல் என்று அர்த்தம். அதை வாங்க வேண்டாம்.
பீர்க்கங்காய்த் தோலைச் சுத்தம் செய்யும்போது, கடினமான நரம்புள்ள தோல் பகுதிகளை அப்புறப்படுத்தவும். தோல் பகுதியைக் கழுவிய பிறகே சமையலுக்குப் பயன்படுத்தவும்.