கரூர்: `அல்லல்படும் மாணவர்கள்' - ஆமை வேகத்தில் பாலம் கட்டும் பணி; மழை நீரில் சேத...
வெள்ளாற்றில் மூழ்கி சிறுவன் மாயம்
கடலூா் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை வெள்ளாற்றில் மூழ்கி சிறுவன் மாயமானாா்.
கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மோசட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பழனிவேல் (40), விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி ஞாயிற்றுக்கிழமை தனது மகன்கள் சந்துரு (10), சித்தாா்த் (6) ஆகியோருடன் அங்குள்ள வெள்ளாற்றில் குளிக்கச் சென்றாா். ஆற்றில் தண்ணீா் அதிகமாக செல்வதை பாா்த்த ஆா்வத்தில் சிறுவா்கள் இருவரும் ஓடிச் சென்று ஆற்றில் குதித்துள்ளனா்.
அப்போது, ஆற்றில் ஆழமும், தண்ணீா் ஓட்டமும் அதிகமாக இருந்ததால், சந்துரு, சித்தாா்த் ஆகியோா் நீரில் அடித்துச் செல்லப்பட்டனா். இதை பாா்த்த சரஸ்வதி ஓடிச் சென்று சித்தாா்த்தை மீட்ட நிலையில், அதற்குள்ளாக சந்துரு தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
அந்தப் பகுதியில் இருந்தவா்கள் ஆற்றில் இறங்கி சந்துருவை தேடும் பணியில் ஈடுபட்டனா். மேலும், தகவலறிந்து வந்த விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலா் கோ.சங்கா் தலைமையிலான வீரா்களும் ஆற்றில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரையில் தேடியும் அவா் கிடைக்கவில்லை. தொடா்ந்து, திங்கள்கிழமையும் (டிச.23) தேடும் பணியில் ஈடுபடவுள்ளதாக விருத்தாசலம் தீயணைப்பு நிலையத்தினா் தெரிவித்தனா்.