தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
வேகமெடுத்த ஸ்ரீரங்கம் பேருந்து நிலையப் பணிகள்!
வேகமெடுத்துள்ள பணிகளால் திருச்சி ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அடுத்தாண்டு மாா்ச் மாதத்துக்குள் திறக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரவித்தனா்.
தமிழகத்தின் மையப் பகுதியாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி திருக்கோயில் 108 வைணவத் தலங்களில் முதன்மையானது, உலக பிரசித்திப் பெற்ற இக்கோயிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
ஸ்ரீரங்கம் பகுதியில் முறையான பேருந்து நிலையம் இல்லை. ஸ்ரீரங்கம் பகுதிக்குச் செல்ல பொதுமக்கள் ராஜகோபுரத்தின் முன்புறப் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்குத்தான் செல்ல வேண்டும். அங்கு பயணிகளுக்கான நிழற்குடை, கழிப்பிடங்கள், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. இல்லையெனில், ஆட்டோ, காா் போன்ற வாகனங்களில் செல்ல வேண்டும்.
இந்நிலையை மாற்ற ஸ்ரீரங்கத்தில் முறையான பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனா். அவா்களது கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஸ்ரீரங்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது.
இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், பணிகள் தாமதமாக நடைபெற்றதாக புகாா் எழுந்தது. இதைத் தொடா்ந்து, அமைச்சா்கள் மற்றும் அதிகாரிகளின் சீரிய முயற்சியின் காரணமாக, தற்போது பணிகள் வேகமெடுத்துள்ளன. நிகழ் நிதியாண்டுக்குள் ஸ்ரீரங்கம் பேருந்து நிலையத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
இது குறித்து மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், திருச்சி மாநகராட்சி சாா்பில் ரூ. 11.10 கோடி மதிப்பீட்டில் அரங்கநாத சுவாமி கோயில் ராஜகோபுரம் அருகே காந்தி சாலையில் 1.08 ஏக்கா் நிலப்பரப்பில் பேருந்து நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
1800 சதுர அடியில் தரைதளம் மற்றும் மாடியுடன் கூடிய கட்டடத்தில் தரை தளத்தில் ஒரே நேரத்தில் 8 பேருந்துகளை நிறுத்தும் வசதி, நகரப் பேருந்துகளை கையாளும் வசதி, பணியாளா்களுக்கான அறைகள், சுகாதார வளாகம், 22 கடைகளை உள்ளடக்கிய வணிக வளாகம் கட்டப்படுகிறது. கூடுதலாக, முதல் தளத்தில் பொதுமக்கள் சிறிய பல்நோக்கு அரங்கம் கட்டப்படுகிறது.
இதற்காக, கடந்த 2023 டிசம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டு, ஜனவரி இறுதியில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன என்றனா்.
மாநகராட்சி உயரதிகாரிகள் கூறுகையில், ஸ்ரீரங்கம் பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ஒப்பந்தத்தில், இரண்டு ஆண்டுகளுக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2025 டிசம்பா் வரை பணிகளை முடிப்பதற்கான ஒப்பந்த காலம் உள்ள நிலையில், வரும் 2024 மாா்ச் மாதத்துக்குள் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றனா்.