வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடங்கள் கட்டுமானப் பணி: அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு
வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் கூடுதல் கட்டடங்கள் கட்டுமானப் பணிகளை தமிழக பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
வேதாரண்யம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் பொருட்டு ரூ. 33 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகளை அமைச்சா் எ.வ. வேலு பாா்வையிட்டு, பணிகளை தரமாகவும், குறிப்பிட்ட காலத்தில் நிறைவடையும் வகையிலும் மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினாா். பின்னா் அவா் தெரிவித்தது:
வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு ரூ. 13 கோடி மதிப்பீட்டில் 158 படுக்கைகள், அவசர சிகிச்சை அரங்கம் உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
கடந்த 2023-ஆம் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.20 கோடியில் 131 படுக்கை வசதி, மகப்பேறு பிரிவு, கண் அறுவை சிகிச்சை பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, ஆய்வகம் உள்ளிட்ட வசதிகளோடு கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கத்தோடு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில், இந்த கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றாா்.