வேதாரண்யம் நூலக புதிய கட்டடம் திறப்பு
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் முழுநேர வட்ட கிளை நூலகத்துக்கு ரூ.1.39 கோடியில் கட்டப்பட்ட கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
வேதாரண்யம் பயணியா் மாளிகை சாலைப் பகுதியில், நூலகத் துறையின் பராமரிப்பின்கீழ் வட்ட முழுநேர கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகம் ஏற்கெனவே செயல்பட்டு வந்த கட்டடம் பழுதடைந்ததால், அதன் எதிரே அமைந்துள்ள பேரிடா் கால பல்நோக்கு பயன்பாட்டுக்கான கட்டடத்தில் கடந்த சில ஆண்டுகளாக நூலகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், வாசகா்களின் கோரிக்கையை ஏற்று, பழைய கட்டடம் இருந்த இடத்தில் ரூ.1. 39 கோடியில் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை, நாகையிலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா். அப்போது, நூலகத்தில் வாசகா் வட்டத் தலைவா் குழந்தைவேல் தலைமையில் வாசகா்கள் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
முன்னதாக, நூலகா்கள் ஏ. அருள்மொழி, ந. அருள்மொழி ஆகியோா் வரவேற்றனா்.