முதல்வர் குறித்து அவதூறு விடியோ! 2 பெண் பத்திரிக்கையாளர்கள் கைது!
வேலைக்கு போகச் சொன்னதால் ஆத்திரம்; பாட்டி தலையில் கல்லை போட்டு கொன்ற பேரன்-ராஜபாளையத்தில் அதிர்ச்சி!
ராஜபாளையம், தளவாய்புரத்தை அடுத்த செட்டியார்பட்டியை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 75). இவரின் கணவர் நவநாதன் 20 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். கணவரின் இறப்புக்கு பிறகு தனியே வசித்து வந்த சரஸ்வதிக்கு ஆறுதலாக, வீட்டுக்கு அருகே அவரின் மகன் பாலசுப்பிரமணியம் என்பவர் தனியே மற்றொரு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
பாலசுப்பிரமணியத்தின் மூத்த மகன் ஸ்ரீதர். இவர், மது அருந்துவது, கஞ்சா உள்ளிட்ட தீயப்பழக்கங்களுக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இதனால் சரியாக வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இந்த நிலையில் தாயுடன் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வசிப்பதற்காக, அதே பகுதியில் வேறொரு வீட்டுக்கு குடிபெயர பாலசுப்பிரமணியம் வீட்டுப்பொருட்களை இடம் மாற்றி வந்துள்ளார். அப்போது மூதாட்டி சரஸ்வதி, ஊதாரித்தனமாக ஊர் சுற்றுவதை விட்டுவிட்டு சீக்கிரத்தில் சரியான வேலைக்குச் செல்லுமாறு தனது பேரனான ஸ்ரீதருக்கு அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், புதிய வீட்டுக்கு பொருட்களை எடுத்துச் செல்லுமாறு கூறி கண்டித்துள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ஸ்ரீதர், அருகே இருந்த அரிவாள்மனையை எடுத்து பாட்டியை வெட்டியுள்ளார்.

இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த நிலையில், ஆத்திரம் அடங்காமல் முதாட்டியின் தலையில் கல்லைப்போட்டு ஸ்ரீதர் கொலை செய்ததாக கூறப்படுகிறது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், கொலை சம்பவம் குறித்து தளவாய்புரம் போலீஸூக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், சரஸ்வதியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரை போலீஸார் கைது செய்தனர்.