உகாண்டாவில் நிலச்சரிவு: மண்ணில் புதைந்த 40 வீடுகள்! 13 பேர் பலி
ஸ்டாப்! ஸ்டாப்! பிரியங்காவை நிறுத்தி போட்டோ எடுத்த ராகுல்!!
மக்களவைக்கு முதல்முறையாக வந்த பிரியங்கா காந்தியை நிறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புகைப்படம் எடுத்தார்.
கடந்த மக்களவைத் தோ்தலில், உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரண்டிலும் வெற்றி பெற்றார். தனது குடும்பத்தின் கோட்டையான ரேபரேலி தொகுதியைத் தக்கவைத்த அவர், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததால், அத்தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வயநாடு மக்களவைத் தொகுதிக்கு கடந்த நவ. 13 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்கு எண்ணிக்கை நவ. 23 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் முதல்முறையாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொதுச் செயளாலர் பிரியங்கா காந்தி 6.22 லட்சம் வாக்குகள் பெற்றதுடன், 4.10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பிரியங்கா காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் முதல் முறையாகப் போட்டியிட்டு, வெற்றிப் பெற்று மக்களவைக்கு சென்றுள்ளார்.
இதையும் படிக்க | வயநாடு எம்.பி.யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி!
நாடாளுமன்ற மக்களவைக்கு முதல்முறையாக சென்ற பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பலரும் வரவேற்றனர்.
அப்போது பிரியங்கா காந்தி மக்களவைக்குள் நுழைந்தபோது அவரது சகோதரரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, பிரியங்காவை நிறுத்தி புகைப்படம் எடுத்தார்.
உள்ளே நுழைந்த பிரியங்கா காந்தியை 'நில், நான் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்கிறேன்' என்று கூறி நிறுத்தி புகைப்படம் எடுத்தார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பின்னர் மக்களவையில் இந்திய அரசமைப்புப் புத்தகத்தை கையில் ஏந்திவாறு வயநாடு தொகுதி எம்.பி.யாக பிரியங்கா காந்தி பதவியேற்றுக்கொண்டார்.
பிரியங்கா காந்திகேரளத்தின் பாரம்பரிய கசவு சேலை அணிந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.