PSU வங்கி பங்குகள் உயர்வு - முதலீட்டாளர்களுக்கு கவனம் அவசியம் | IPS FInance - 34...
``ஸ்டாலின், என் தம்பி எந்த படைக்கு தளபதி? வீட்டுக்குள் பயந்து கிடக்கும் தளபதி உலகில் இல்லை'' -சீமான்
திருவெறும்பூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மருது பாண்டியர்கள் நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
"உலகெங்கிலும் புரட்சியாளர்கள் விடுதலைக் களத்தில் முன்வைத்த ஒரே முழக்கம்- ‘அடிமை வாழ்வா? உரிமைச் சாவா? சரணடைந்த வாழ்வா? அல்லது சண்டையிட்டு சாவா?’ என்பதே. உரிமையை இழப்பது இனத்துக்கான இழப்பு. அதனால் தான் உயிரினும் மேலானது எமது உரிமை.
மருது பாண்டியர்கள் மரணம் என்பது மனித வாழ்வில் ஒருமுறை தான்-சாவது உறுதி. ‘சத்தியம் போகும் உயிர், உரிமைக்காக போராடி போகட்டும்’ என்று அவர்கள் முழங்கினர். அதே முழக்கத்தையே பிரபாகரனும் முன்வைத்தார். ‘போராடினாலும், போராடாவிட்டாலும் சாவோம்; போராடினால் உரிமையைப் பெற வாய்ப்பு இருக்கிறது என்றார்.

முதல்வர், பிரதமர், ஜனாதிபதி என அதிகாரமிக்க பதவியில் இருப்பவர்களை வீரமிக்க வீரர்கள்தான் பாதுகாக்கிறார்கள். அறிவு, செல்வம், புகழ் - எதற்கும் பாதுகாப்பு ‘வீரம்’ தான். அதனால் தான் உலகெங்கிலும் வீரம் போற்றப்படுகிறது.
படத்தில் பறந்து பறந்து சண்டையிட்டு 100 பேரை காலி செய்யும் கதாநாயகர்கள், உங்கள் தளபதி கூட ‘எனக்கு பாதுகாப்புக்கு Z பிரிவு கொடுங்கள்’ என்கிறார். அதனால் தான் வீரம்- வீரர்களுக்கானது; கோழைகளுக்கானது அல்ல என்கிறார் வீரத்துறவி விவேகானந்தர்.
எங்கள் முன்னோர் பெருமையை பாடுவது வாக்குக்காக அல்ல; வருங்கால தலைமுறை பிள்ளைகள் வழிநடத்தலுக்காக. பெருமைப்படிக்கல்ல, எங்களை நாங்களே தேற்றிக்கொள்ள. அதற்காகத்தான் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்துகிறோம்.
‘மருதுபாண்டியன் யார் என்பதே தெரியாதவன் எனக்கு வாக்கு செலுத்தி என்ன ஆகப்போகிறது?’ ஒரு மண்ணின் மக்கள் பிளந்து பிரிந்து நின்றால், அடுத்தவன் ஆட்சியின் கீழ் அடிமையாக நேரிடும்’ என மருதுபாண்டியர்கள் முழக்கம் வைத்தது வெள்ளையன் காலத்தில். நான் கொள்ளையன் காலத்தில் அந்த முழக்கத்தை வைக்கிறேன்.
வேலுநாச்சியார்
வேலுநாச்சியார் உயிரிழந்த பிறகு 85 ஆண்டுகள் கழித்து வடநாட்டில் பிறந்தவர் ஜான்சி ராணி லட்சுமிபாய். வரலாற்றைப் படிக்கும் போது ‘தென்நாட்டு ஜான்சி ராணி வேலுநாச்சியார்’ என்று படிக்கிறாய். நியாயமாக ‘வடநாட்டு வேலுநாச்சியார் ஜான்சி ராணி’ என்று வரலாறு பதிவாகியிருக்க வேண்டும்.
வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, வரலாற்றில் தெளிவுபெறாத எந்த இனமும் எழுச்சியடைய முடியாது.
மருது சகோதரர்கள்
சோழ மன்னர்களுக்கு பிறகு மருது சகோதரர்கள் வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். ஆரஞ்சு பழம் அதிகளவில் விளைவித்து ஏற்றுமதி செய்தார்கள். அதனாலே அவர்களின் படையில் வேளாண்குடி மக்கள் சாரை சாரையாக சேர்ந்தனர்.
200 ஆண்டுகளில் சீமைக் கருவேலம், யூகலிப்டஸ் போன்ற நச்சு செடிகள், மரங்கள் வந்தது எப்படி? இன்று தலைகீழாக மாறியிருக்கிறது. நெல் விளைவித்து கொடுத்தால் அதை பாதுகாக்க முடியாத திராவிட அரசு, அதை தெருவில் போட்டு முளைக்க வைக்கிறது. நம் உழைப்புக்கு மரியாதை இல்லாமல் நமது நெல்லை தெருவில் போட்டது போல, ஒருநாள் இவர்களையும் நாம் தெருவில் போட வேண்டும் என்ற உறுதியை எடுத்தாக வேண்டும்.
வாக்கு செலுத்தும் போது தெருவில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்ததை நீங்கள் ஒரு முறை சிந்தித்து பார்க்க வேண்டும்.
சாராயம் எனும் நஞ்சு
சாராயம் எனும் நஞ்சை அரசு விற்பனை செய்கிறது. தீபாவளி நாளன்று ஒரே நாளில் ரூ. 290 கோடிக்கு மதுவை அருந்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு ‘எதற்காக இலவசம்?’ என்ற கேள்வி வருமா? வராதா?
டாஸ்மாக்கில் விற்கும் மதுவை உயர்ந்த கட்டடத்தில் அடுக்கி, குளிரூட்டி, கம்பி வலை போட்டு, சிசிடிவி கேமிரா, வாயிலில் இரண்டு காவலர்களை வைத்து பாதுகாக்கும் அரசை நீங்கள் எத்தனை நாளைக்கு பாதுகாக்கப் போகிறீர்கள்?
அந்த குடோனுக்குள்ளே மூடி கொளுத்தாமல், நீங்கள் எத்தனை காலத்துக்கு வேடிக்கை பார்க்கப் போகிறீர்கள்?

ரூ.150 கோடியில் சமாதி
பரம்பரை வீரத்தை போற்றுவதால் வீரமிக்க தலைமுறை உருவாகும். தமிழன் அடிமையானதே போர்க்குணம் இல்லாமல் போனதால்தான். தன்னிடத்தில் இருப்பதை விட பிறரிடத்தில் இருப்பதே உயர்ந்தது என்ற இழிவான சிந்தனை… சகித்துக்கொள்ள முடியாத அளவு கடந்த திரைக்கவர்ச்சி… தன்னினப் பகை -இதுவே காரணம்.
அதைத்தான் ஜம்புத்தீவு பிரகடனத்தில் ‘அனைவரும் ஒன்றிணைந்துவருங்கள்’ என மருது வீரர்கள் அறிவித்தார்கள். அதைத்தான் நானும் சொல்கிறேன்.
கடற்கரையில் ரூ.150 கோடியில் சமாதி கட்டி படுத்திருக்கும் அவர்கள் என்ன செய்தார்கள்?”
காளையார்கோயிலில் அடக்கம் செய்யப்பட்டுள்ள மருதுவீரர்கள் இடத்தில் மரப்பாச்சி பொம்பை போன்ற சிலைக்கு வீரவணக்கம் செலுத்த ஆண்டுதோறும் நாம் செல்லும்போது சிறைக்குள் கைதியை சந்திக்க செல்வது போல ஒடுக்கமான கம்பிகள் கட்டி அடிமைகள் அழைத்துச் செல்வது போல இருந்தது. இழிந்த திராவிட ஆட்சி நம்மை எவ்வளவு தூரம் புறந்தள்ளி அவமதிக்கிறது என்பதை மானத்தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தேவர் ஜெயந்தியின்போது எதற்காக கட்சி கொடியை ஏற்றுகிறீர்கள்? அரசு இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எனது தாத்தனின் கோயிலுக்கு வருவதற்கு முன்னால் ஒரு வளைவு இருக்கிறது. அதற்கு முன்னால் எந்தக் கட்சி கொடியும் இருக்கும் பட்சத்தில், அந்த வளைவுக்குள்ளே இருந்தாலும் என் பிள்ளைகள் அவை அனைத்தையும் பிடுங்கி வீசுவார்கள். வாழை மரம், கரும்பு அங்கு கட்டக்கூடாது. வாழை வைத்தால் என் பிள்ளை கழுத்தில் வாளை வைப்பான்.”

அந்நிய முதலீடு
அந்நிய முதலீடுகளை ஈர்க்கிறோம் என்ற பெயரில் நம் முதல்வர், பிரதமர்கள் நம்மிடத்தில் இன்னும் கதைகள் விடுகிறார்கள். அன்று வர்த்தகம் என்ற பெயரில் வந்த அந்நியரை விரட்டியடித்து விடுதலை பெற்ற இந்நாட்டில் இன்றைய தலைவர்கள், “எங்கள் ஊருக்கு வாருங்கள், வணிகம் செய்ய வாருங்கள்” என்று அந்நியர்களை இரு கைகள் விரித்து அழைப்பதை வளர்ச்சி எனக் கூறுகிறார்கள்.
பாட்டன்-பாட்டி காலத்தில் ஒரே எதிரி வெள்ளையன். இப்போது ஆயிரக்கணக்கான எதிரிகள் - அவ்வளவு பேரும் கொள்ளையாளர்கள். ஒரு மருதுபாண்டியன் போதாது, நாமெல்லாம் மருதுபாண்டியர்களாக மாறவேண்டும். அதனால் தான் நான் சொல்கிறேன் - களம் அதேபோலவே உள்ளது. அப்போது போர் ஆயுதம்; இப்போது அறிவு ஆயுதம். அப்போது கருவிகள்; இப்போது கருத்தியல் புரட்சி. நோக்கம் ஒன்று தான் - இனத்தின் விடுதலை. அன்று ஒருவன்; இன்று பல பேர்.
“ரூ. 9,000 கோடி முதலீடுகளை கொண்டு வந்திருக்கிறோம்” எனக் கூறப்படுகிறதென்று சொல்கிறார்கள். இந்த நாட்டின் அமைச்சர்கள், அதிகாரத்தில் இருந்த ஒவ்வொருவானும் பல லட்சக்கணக்கான கோடிகளை வைத்திருக்கிறார்கள். வெளிநாட்டு முதலாளிகளுக்கு நம் தாய்நாட்டை விற்பதை வளர்ச்சி எனக் கற்பிக்கிறார்கள்.
தேன் ஊற்றுகிறார்கள். இதை இளைய தலைமுறை உணர்ந்து தெளிந்து எழ வேண்டும் - இதுதான் இந்த நாளில் அறிய வேண்டிய செய்தி. நாமும் மருது சகோதரர்கள் போலப் பிரகடனம் செய்ய வேண்டும்.
யார் தளபதி?
இன்று யாரை பார்க்கிறீர்களோ அவர்களை ‘தளபதி’ என போட்டுக் கொள்வதை நீங்கள் காண்கிறீர்கள்.
ஸ்டாலின் மற்றும் என் தம்பி ஆகியோர் எந்தப் படைக்கு தளபதி என்பது தெரியாது. பயந்து வீட்டுக்குள்ளேயே படுத்துக்கிடக்கும் தளபதி உலகத்திலேயே கிடையாது. ஆறு படைகளை கட்டிப் போராடிய பிரபாகரனையும் தளபதி என்று போட்டுக் கொள்ளவில்லை.
தளபதி என்றால் வேலுநாச்சியார் படையில் நின்று போரிட்டு நிலத்தை வென்ற மருதுசகோதரர்கள்தான் தளபதி. இவர்கள் சொல், சீரங்கம் படைக்காதவர்களா தளபதி? புரட்சி, தளபதி என்ற வார்த்தைகள் தமிழ்நாட்டில் சிக்கிப் பாடப்படுகிறது.
நாட்டை காக்கப் போராடுபவர் மாவீரன். விடுதலைக்காக செக்கிழுத்த செம்மல் வ.உ.சி சொத்துக்களை விற்று நாட்டிற்குக் செலவு செய்தார். அதே நேரத்தில் ராமசாமி சொத்துக்களை சேர்த்துக் கொண்டு வந்தார்.
யாரை இந்த சமூகம் அதிகம் போற்றுகிறது? வெள்ளையன் தரும் பதக்கம், பட்டயத்திற்கு கை நீட்டி நிற்பதை மனிதக் கழிவை தின்பதாகவே சமம் என்று மருதுசகோதரர்கள் ஜம்புத்தீவு போர் பிரகடனத்தின் போது கூறினர். அதுபோலவே, அவர்கள்தரமான ரூ.1,000, ரூ.500 பணம், இலவச அரிசி, பருப்பு, பொங்கல் போன்ற இனாம்களுக்கு கை நீட்டி நிற்பதும்.
எனது பாட்டன் சொன்னது போல மனிதக் கழிவை தின்பதற்கு சமம். தன்மானமிக்க தமிழ் பிள்ளைகளாக நிமிர்ந்து எழ வேண்டும்.

“பா.ஜ.க.-வை வரக்கூடாது-எங்களுடன் வாருங்கள் என்று தி.மு.க.வும்; ‘தி.மு.க.-வை ஒழிக்க வேண்டும்’ என்று அ.தி.மு.க. அழைக்கிறது. நான் சொல்கிறேன் - இவர்கள் அனைவரையும் வீழ்த்த என்னோடு வாருங்கள். தி.மு.க.–அ.தி.மு.க. என்ற இரு பெரும் ஊழல், ரத்தக் கரை படிந்த பாறைகளை புரட்டிப்போட என்னோடு திரண்டு வாருங்கள்,” என்றார்.
முன்னதாக, திருவெறும்பூர் தொகுதிக்கு ஜல்லிக்கட்டு ராஜேஸ், மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு பேராசிரியர் தேன்மொழி, லால்குடி தொகுதிக்கு வழக்கறிஞர் மதன் ஆகியோரை வேட்பாளர்களாக அறிவித்தார்.















