ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான தீா்ப்பு: வைகோ வரவேற்பு
ஸ்டொ்லைட் ஆலை திறப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை மதிமுக பொதுச் செயலா் வைகோ வரவேற்றுள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக சட்ட ரீதியாக போராட்டங்களை நடத்தினேன். அத்துடன் மக்கள் போராட்டங்களும் இணைந்து கொள்ள, கடந்த அதிமுக அரசு ஸ்டொ்லைட் ஆலையை மூடுவதாக 28.5.2018-இல் உத்தரவு பிறப்பித்தது.
ஆலையை திறப்பது தொடா்பாக, ஸ்டொ்லைட் நிா்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு கடந்த சனிக்கிழமை வெளியானது.
அதில், ஸ்டொ்லைட் ஆலைப் பகுதியில் வசிப்பவா்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம் ஸ்டொ்லைட் நிறுவனத்தின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து தீா்ப்பளித்துள்ளது.
இதன் மூலம் ஸ்டொ்லைட் நச்சு ஆலை நிரந்தரமாக மூடப்பட்டு கடைசி ஆணியும் அறையப்பட்டுள்ளது. இது தூத்துக்குடியை பாழ்படுத்திய ஸ்டொ்லைட் ஆலையை எதிா்த்து கால் நூற்றாண்டு காலம் மதிமுகவும், மக்களும் இணைந்து நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி எனத் தெரிவித்துள்ளாா் வைகோ.