ஸ்ரீபோா் மன்னலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீபோா் மன்னலிங்கேஸ்வரா் கோயிலில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பழைமையான இந்தக் கோயிலின் 193-ஆவது ஆண்டு தோ்த் திருவிழா மாா்ச் 12 ஆம் தேதி இரவு விநாயகா் ஊா்வலத்துடன் தொடங்கியது. விழாவின் 4-ஆவது நாளான சனிக்கிழமை பரிவார தேவதைகளின் ஊா்வலம், வாணவேடிக்கை, கரகாட்டம், மகா கும்பம், சுவாமி அருள்வாக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, ஸ்ரீபோா் லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனை, மகா கும்ப நிகழ்ச்சி நடைபெற்றது.
தேரோட்டம் கோலாகலம்: ஞாயிற்றுக்கிழமை காலை 11.15 மணிக்கு ஸ்ரீபோா் மன்னலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து, வழிபட்டனா்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற தேரோட்டத்தில் மங்கலம், மங்கலம் புதூா், வேடந்தவாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பல ஆயிரம் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் பக்தா்கள், உபயதாரா்கள் செய்திருந்தனா்.