புதுச்சேரி: "ஓட்டுக்கு ரூ.2,500; தொகுதிக்கு ரூ.5 கோடி..." - ரங்கசாமி மீது காங்கி...
``1000 வெள்ளத்தாலும் அசைக்க முடியாத முருகன் கோவில்...'' - வியக்க வைக்கும் தொழில் நுட்பங்கள்..!
திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றுப் படுகையில் அமைந்துள்ளது புகழ் பெற்ற குறுக்குத்துறை முருகன் கோயில். ஆற்றில் வெள்ளம் வரும்போதெல்லாம் இந்தக் கோயில் தண்ணீருக்குள் மூழ்கிவிடும். வெள்ளப்பெருக்கு வடிந்த உடன், மீண்டும் பொலிவோடு காட்சிதரும்.
இந்தக் கோயில் சுமார் 300 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்பட்டு வந்த நிலையில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி மீனா, மற்றும் தொல்லியல் உதவிப் பேராசிரியர்கள் முருகன் மற்றும் மதிவாணன் ஆகியோர் கல்வெட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்தக் கல்வெட்டு எழுத்துகளின் வடிவத்தின் அடிப்படையில், இக்கோயிலில் உள்ள வெளி சுற்றுப்பிரகாரமே 950 ஆண்டுகள் பழமையானது என்பதை உறுதி செய்தனர். மேலும், கோயில் மண்டப தூண்கள் மற்றும் சுவர்ப் பகுதிகளில் 950 ஆண்டுகள் பழமையான பல வகையான கட்டிடக்கலை அங்கங்களை கண்டறிந்தனர்.
இந்த கோயிலின் கருவறை ஒரு பாறையைக் குடைந்து முருகன் சிலை வடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் வெளிப்புற சுற்றுப் பாதையே 950 ஆண்டுகள் பழமையானது என்று கண்டறியப்பட்ட நிலையில், இந்தக் கருவறை ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டது என அறிய முடிகிறது. இந்தக் கோயில் கருவறைப்பகுதி 1228 ஆண்டுகள் பழமையான மானூர் குட ஓலை கல்வெட்டுக் காலத்ததையாகவோ அல்லது அதற்கும் முற்பட்டதாகவோ இருக்கலாம்.
தற்போது கட்டப்பட்டும் காங்கிரீட் கட்டிடங்களின் ஆயுள் நூறு ஆண்டுகள்தான். ஆனால், இந்தக் கோயில் சுமார் 1000 வெள்ளத்தை ஊதித் தள்ளி கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது. தாமிரபரணி ஆற்று வெள்ளத்தை எப்படி தாக்குப் பிடித்து நிற்கிறது என்பதே பெரும் வியப்புக்குரிய கேள்வியாக இருந்தது. அதற்கான பதிலை தேட ஆரம்பித்த போது, கோயிலில் உள்ள கட்டுமான தொழில் நுட்பங்கள்தான் எங்களுக்கு மிகவும் வியப்பாக இருந்தது.
இந்தக் கோயில் கட்டுமான தொழில்நுட்பங்களை அறிய, பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பொறியாளர் ஸ்டாலின் என்பவரை அழைத்துக் கொண்டு இந்தக் கோயிலுக்குச் சென்றேன். இவரின் உதவியுடன் இந்தக் கோயில் கட்டப் பயன்படுத்திய ஒன்பது கட்டுமானத் தொழில்நுட்பங்களைக் கண்டறிந்தோம்.
1. ஒளியின் போக்கை மாற்றி அமைக்கும் தொழில்நுட்பம்
பூமியில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ சூரிய ஒளிதான் அடிப்படைக் காரணம். இந்தக் கோயிலில், ஒளியின் போக்கை மாற்றி அமைக்க பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பத்தை முதலில் பார்க்கலாம்.
விழாக் காலங்களில் தென்னங்கீற்று பந்தலைப் பார்த்திருப்பீர்கள். அந்தத் தென்னங்கீற்றில் ஆங்காங்கே சிறு சிறு நுண்ணிய ஓட்டைகள் இருக்கும். மதிய நேரத்தில் அந்த ஓட்டை வழியாக சூரிய ஒளி பயணித்து தரையை வந்தடையும். அதனால் சிறு சிறு ஒளிவட்டம் ஆங்காங்கே காணப்படும்.
அந்த ஒளிவட்டங்கள் சூரிய ஒளி நேரடியாகத் தரையில் விழுவதால் உருவாகியவை. குறுக்குத்துறை முருகன் கோயிலின் மேல் தளத்தில் 24 துவாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வழியே சூரிய ஒளி கோயிலுக்குள் வருகிறது. இந்த ஒளி எப்போதும் நேரடியாக கோயிலின் தரையை அடைவதில்லை. மாறாக ஒளி துவாரத்தின் பக்கவாட்டு சுவரில் பட்டு எதிரொலிக்கிறது. இவ்வாறு பிரதிபலிக்கப்பட்ட ஒளிதான் கோயிலுக்குள் பெரும்பாலான நேரங்களில் வந்தடைகிறது. இதனால் கோயிலுக்குள் குழாய் மின்விளக்கு போட்டது போல் அறை எங்கும் வெளிச்சம் கிடைக்கின்றது !
டார்ச் ஒளி நேரடியாகத் தரையில் விழுந்தால் ஒரு சில அடி தூரத்தை தான் பார்க்க முடியும். ஆனால், மேற்தள சுவரில் பட்ட ஒளி பிரதிபலித்தால் அறையின் எல்லா இடத்திற்கும் ஒளி கிடைக்கும்.
இது மாதிரி இந்தக் கோயிலின் மேல் தளத்தில் அமைத்துள்ள துவாரங்கள் ஒளியை நேரடியாகக் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. அவை சூரிய ஒளியை முற்றிலும் பிரதிபலிக்க வைக்கிறது. பிரதிபலித்த ஒளி அந்த அறையில் ஒரு மங்கலான குழாய் விளக்கு ஒளிர்ந்து கொண்டிருப்பது போல் இருக்கும். குறுக்குத்துறை முருகன் கோயில் மேற்தளத்தில் அமைந்துள்ள இந்தத் துவாரங்கள் அறிவியல் பூர்வமானது, மேலும் பார்க்க அழகானது.
2. வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பம்
பரந்து விரிந்த வெட்டவெளியில் பயணித்த காற்று கோயிலின் மேற்கூரையில் உள்ள இந்த 24 சிறு துவாரங்கள் வழியாக நுழைகிறது. இப்படி நுழைந்த காற்று கோயிலுக்குள் திடீர் என விரிவடைகிறது. அதனால் காற்றின் வெப்பநிலை பெருமளவில் குறைகிறது.
உங்களுக்கு ஒன்று தெரியுமா? நவீன ஏசி (A/C) காற்றை ஒரு சிறு குழாய் வழியே பயணிக்க வைத்துத் திடீர் என விரிவடையச் செய்கின்றது. இதனால் காற்றின் வெப்பநிலை பெருமளவு சரிய வைக்கிறது. இப்படித்தான் A/C நமக்கு குளுகுளு காற்றை உமிழ்கின்றது.
இது மாதிரிதான் இந்தக் கோயிலின் மேற்தளத்தில் உள்ள துவாரங்கள் கோயில் உள்புற வெப்பநிலையைக் கணிசமான அளவு குறைக்கின்றன.
3.ஓசையின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்த...
இந்தக் கோயிலில் உள்ள மூன்றாம் தொழில்நுட்பம் ஓசையின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துதல்.
மேற்தளத்தில் அமைந்துள்ள 24 துவாரங்கள் மேலும் பல வகையில் இந்தக் கோயிலுக்குப் பயன்படுகின்றன. உதாரணமாகக் கோயில் உள்ளே காற்று சீராகப் பயணித்து வருகிறது. இதனால் மக்கள் பேசும்போது ஒலி எதிரொலிக்காது. எனவே, கோயிலுக்குள் பேசினாலோ அல்லது பாடினாலோ ஒலி (Echo) எதிரொலிக்காது. இதனால் கோயில் அறைகளில் பாடல்களைப் பாட மற்றும் சொற்பொழிவு செய்ய ஏற்ற இடமாக அமைகின்றன!
4. காற்றழுத்தத்தில் இருந்து கோயிலைக் காப்பாற்றும் மேற்கூரைத் துவாரங்கள்.
வெள்ள தண்ணீர் கோயிலுக்குள் நுழைந்து ஒவ்வொரு அறையையும் நிரப்பும். அப்போது, காற்று கோயிலிலுள்ள அறைகளில் ஆங்காங்கே சிக்கிக் கொள்ளும். இந்த நிலையில் வெள்ள நீரில் கோயில் படிப்படியாக மூழ்கடிக்கும். அப்போது ஆங்காங்கே சிக்கியுள்ள காற்றால் கோயில் வெள்ள நீரில் மிதக்க முயற்சிக்கும்.
இதனால், ஒரே வெள்ளத்தில் கோயில் சின்னா பின்னமாக உடைந்து சிதைந்து போகும். இதனைத் தடுக்க சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சிறந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். அதுதான், கோயிலின் மேல் தளத்தில் அமைத்துள்ள 24 துவாரங்கள். இவை வெள்ள தண்ணீர் கோயிலுக்குள் ஏற ஏற, காற்றை எளிதாக வெளியேற்றி விடுகிறது. இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்படுகிறது.
5. தண்ணீரின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பம்
இங்குள்ள ஐந்தாவது தொழில் நுட்பம் சீரிப்பாய்ந்து வரும் வெள்ள நீரோட்டத்தைக் கையாளுவதுதான்.
நீரோட்டத்தின் சக்தியைக் கட்டுப்படுத்த இந்தக் கோயில் கருவறையின் வெளிப்புறம் எண்கோண வடித்திலும் (Octagon) கருவறையின் உள்புறம் செவ்வகமாகவும் கட்டப்பட்டுள்ளது. இந்த எண்கோணத்தின் அகலமான பகுதி கோயிலின் பின் பகுதியில் உள்ளது.
கோயிலுக்குள் நுழைந்த தண்ணீர் நேராக கருவறைப் பகுதிக்குத்தான் செல்கின்றது. காரணம், கருவறைப் பகுதி மட்டுமே இந்தக் கோயிலில் ஆற்று மட்டத்திற்கு இணையாக உள்ளது. கருவறையிலிருந்து கோயிலுக்கு வெளியே வர வரக் கோயிலின் உயரம் படிப்படியாக உயர்கின்றது.
இதன் காரணமாகவே, வெள்ளநீர் முதலில் கருவறைக்குள் நுழைகிறது. அப்படியே தண்ணீர் கருவறையைச் சுற்றியுள்ள எண்கோண சுற்றுப்பாதையையும் ஒருசேர நிரப்புகிறது. இப்போது கருவறைப் பகுதியில் உள்ள தண்ணீர் அளவும், ஆற்றில் ஓடும் வெள்ளத்தின் மட்டமும் சமமாக இருக்கும்.
இதனால், ஆற்று வெள்ள அளவு மட்டமும் கோயிலின் உள்ளே உள்ள தண்ணீரின் அளவும் ஒரே அளவில் இருக்கும். இதனால் கோயிலின் மொத்த எடை அதிகரிக்கிறது. இதனால் வெள்ளம் எவ்வளவு வலுவாகத் தள்ளினாலும் கோயிலை ஒன்றும் செய்ய முடியாது! காரணம், கருவறையைச் சுற்றி வரப் பயன்படுத்தும் பாதையிலும் கருவறைப் பகுதியிலும் நுழைந்த தண்ணீர் காங்ரீட் போல் செயல்படுகின்றது. ஏனென்றால், "ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் உள்ள தண்ணீரை அமுக்கி அதன் அளவை குறைக்கவோ அல்லது அதனை அங்கும் இங்கும் இழுத்துத் தண்ணீரின் அளவை அதிகப் படுத்தவோ முடியாது" என்கிறது பாஸ்கல் விதி.
எணகோண வடிவில் அமைந்துள்ள கருவறையை அடுத்துள்ள உள்ள முதல் பிரகார சுவர் ஐங்கோண வடிவில் உள்ளது. அதற்கு அடுத்து உள்ள சுற்று பிரகார சுவர் அறுங்கோண வடிவில் உள்ளது. இந்த மூன்று வடிவத்தில் அறுங்கோணமே அதிக வலுவானது. இதில்தான் முதலில் தண்ணீர் வேகமாக முட்டுகிறது.
இந்த அறுகோணத்தில் ஒரு முனை கப்பலின் முன்பகுதி போல் காட்சி அளிக்கிறது. இங்குதான் ஓடோடி வரும் தண்ணீர் முதன்முதலில் வந்து முட்டுகிறது. இதனால் தண்ணீர் எளிதாகப் பிரிந்து செல்கிறது. இதனால் கோயில் வெள்ளத்தின் வலிமையான தாக்கத்திலிருந்து எளிதாகத் தப்பித்துக் கொள்கிறது. அதனால்தான் கோயிலின் வெளிப்புற சுவர் அறுங்கோணத்தில் அமைத்துள்ளனர்.
மேலும், வெள்ள நேரத்தில் இந்த மூன்று சுற்றுப் பாதையிலிருந்து கோயில் வாயில்வரை நிரம்பியுள்ள தண்ணீரின் மொத்த எடைதான் கோயிலை வெள்ளத்திலிருந்து காப்பாற்றும் அற்புதமான தொழில் நுட்பம் !
6. இடத்தேர்வுத் தொழில்நுட்பம்
இந்தக் கோயிலின் தென் மேற்கே ஆற்றுக்குள் ஒரு சிறு குன்று உள்ளது. அதன் வடபுறம் ஒரு மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்தைத் திதி கொடுக்க மக்கள் இன்றும் பயன்படுத்தி வருகின்றனர்.
அந்தச் சிறு குன்றுதான் பெரிய வெள்ளத்தின் சக்தியைத் தாங்கிக் கொண்டு முருகன் கோயிலைக் காப்பாற்றுகின்றது. அதாவது, இந்தக் குன்றில் மோதிய வெள்ளத் தண்ணீர் வடக்கு நோக்கித் திசை திருப்பப்படுகிறது. இதனால் கோயிலின் மேல் வெள்ளம் அதிக சக்தியைக் காட்ட முடியயாது!
படித்துறையில் காணப்படும் கல்வெட்டு 950 ஆண்டுகள் பழமையானவை. அது, தண்ணீர் பிரிந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதை விளக்குகிறது.
அதாவது, இயற்கையின் சக்தியை பயன்படுத்தி, ஆற்று வெள்ளத்தின் வேகத்தை கட்டுப்படுத்தியுள்ளனர். இது மிகவும் அற்புதமான திட்டம்.
7) 6.5 கோடி ஆண்டுகள் பழமையான பாறை..
குறுக்குத் துறை முருகன் கோயிலுக்குக் கிழக்கே 2 கிலோமீட்டர் தூரத்தில் நான்கு பெரிய பாலங்கள் உள்ளன. அதில் ஒன்று 1843 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதனைச் சுலோச்சனா முதலியார் பாலம் என அழைக்கின்றனர். இந்தப் பாலம் 760 அடி நீளமும், 21.5 அடி அகலமும் கொண்டது. இந்தப் பாலத்தை 12 இராட்சச இரட்டைத் தூண்கள் தாங்கி நிற்கின்றன.
ஆனால், இந்தக் குறுக்குத் துறை முருகன் கோயில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தின் மொத்தப் பரப்பளவை விட இந்தக் கோயில் பல மடங்கு அதிக பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
சரி.
“இந்தக் கோயிலைக் கட்ட எத்தனை இராட்சச தூண்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன?” எனப் பார்த்தேன்.
அதிர்ச்சியே மிஞ்சியது. காரணம் இந்தக் கோயிலைக் கட்ட இராட்சச தூண்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. மாறாக எண்கோண கருவறையின் வடபுற சுவர் ஒரு பாறையைக் குடைந்தே உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, கருவறையை இந்தப் பாறையுடன் வலுவாகப் பிணைத்துள்ளனர்.
இந்தப் பாறையை மேற்குத் தொடர்ச்சி மலையின் எச்சமாகவே பார்க்கிறேன். மேலும், இது வலுவான கிரானைட் பாறை. மேற்குத் தொடர்ச்சி மலை 6.5 கோடி ஆண்டுகள் பழமையானது. எனவே இந்த பாறையையும் 6.5 கோடி ஆண்டுகள் பழமையானதுதான். அதனால்தான் இந்தக் கோயில் இவ்வளவு வலுவுடன் நிமிர்ந்து நிற்கின்றது.
8.கல்தூண்களை ஒன்றுடன் ஒன்றாகப் பிணைக்கும் தொழில்நுட்பம்.
கோயிலின் கருவறைப் பகுதியில் சிமெண்டும் பயன்படுத்தப்படவில்லை. சுண்ணாம்பும் பயன்படுத்தப்படவில்லை. மாறாகத் தஞ்சைப் பெரிய கோயில் மாதிரி கல்தூண்களை ஒன்றுடன் ஒன்று இணைத்துத்தான் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கோயில் உள்ள எந்த இரண்டு கல்தூண்களையும் எடுத்துக் கொள்வோம். அதில் ஒன்று ஆண் தூண். இரண்டாவது பெண் தூண். பெண் தூணின் ஒரு பகுதி ஆண் தூணின் ஒரு பகுதிக்குள் சொருகியபடி வைத்துவிடுவார்கள். இப்படித்தான் இந்தக் கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களும் இணைக்கப்பட்டுள்ளன. இப்படி இந்தக் கற்கட்டிடத்தில் உள்ள மொத்த தூண்களும் ஒரு சங்கிலி போல் பிணைக்கப்பட்டுள்ளன.
இதேமாதிரி பாறையைக் குடைந்து தூண்களை அதனுள் சொருகி கட்டுமானத்தை தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக இந்தக் கட்டடம் எந்த வெள்ளத்தையும் தாங்கும். எந்த நிலநடுக்கத்தையும் தாக்குப் பிடிக்கும்.
9. கருங்கற்களால் செதுக்கப்பட்ட விமானம்
இந்தக் கோயில் விமானம் பல ஆயிரம் கிலோ எடை மிகுந்த கற்களால் எண்கோணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, கருவறைக்கு மேல் உள்ள இந்த எடை மிகுந்த கருங்கல் கோபுரம் ஒன்றுடன் ஒன்றாகப் பிணைக்கப்பட்ட கருங்கல் தூண்களாலான மதில் சுவர்கள் மற்றும் மேல்தளத் தூண்களை எங்கும் அசையாமல் ஒரே இடத்தில் நிலை நிறுத்த உதவுகிறது.
10.குடைவரைக் கோயில்
கோவில்பட்டிக்கு அருகே `குழுவாணை நல்லூர்' உள்ளது. அங்கு ஒரே கல்லில் ஒரு கோயிலையே வடித்துள்ளனர். இந்த ஊர் இப்போது கழுகுமலையென அழைக்கப்படுகிறது. இங்கு வெட்டுவான் கோயில் உள்ளது. இந்தக் கோயில் விமானத்தின் உச்சிப் பாகம் முதலில் செதுக்கப்பட்டது. கருவறை வாசல் கடைசியாகச் செதுக்கப்பட்டது.
இப்படி மலையைக் குடைந்து இந்தக் கோயிலை மேலிருந்து கீழாக 1300 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கியுள்ளனர். இது பிரமிக்கவைக்கும் ஒரு குடைவரைக் கோயிலாகும்.
இந்தக் குறுக்குத்துறை முருகன் கோயில் கருவறையும் ஒரு குடைவரைக் கோயில்தான். ஆனால், இதன் விமானம் பல ஆயிரம் கிலோ எடையுள்ள கற்களால் செய்யப்பட்டது. இந்த விமானமும் இந்தக் கோயில் நீண்ட வரலாற்றுக்கு முக்கியமானது. இதன் எடையால், எந்த வெள்ளத்தாலும் இந்தக் கோயிலை அசைக்க முடியாமல் செய்கிறது.
இந்தக் கோயிலை வடிவமைத்தவர்கள் அதி புத்திசாலிகள். பல இயற்பியல் தத்துவங்களைக் கரைத்துக் குடித்தவர்கள். இத்தனை அறிவியல் சங்கதிகளையும் பயன்படுத்தித்தான் இந்தக் கோயிலை வடிவமைத்துச் சாதனை செய்துள்ளனர். தமிழுக்கு ஒரு திருக்குறள்; கட்டிடக் கலைக்குக் குறுக்குத் துறை முருகன் கோயில் என்கிறது என் மனம்.
தமிழகத்தில் ஒவ்வொரு 50 கி.மீ தூரத்திலும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள் உள்ளன. கோயில்கள் பிரார்த்தனை செய்ய மட்டுமே என்பதையும் தாண்டி, கோயில்களில் அக்கால தொழில்நுட்ப முன்னேற்றங்களை எல்லாம் காட்சிப்படுத்தியுள்ளனர். அவைகளை கண்டறியும் நோக்குடனும் கோயிலைப் பார்க்க வேண்டும்.