ம.பி: காவலர்கள் முன்னிலையில் மகளை ஆணவக் கொலை செய்த தந்தை கைது!
``சபரிமலை ஐயப்பனின் திருவபரண அலங்காரத்தை பெண்களும் தரிசிக்கலாம்" பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா கோயில்!
சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு மகரவிளக்கு அன்று திருவாபரணங்கள் சாற்றி பூஜைகள் நடப்பது நமக்குத் தெரியும். சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு சாற்றப்படும் அதே திருவாபரணங்கள் பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தாவுக்கு சாற்றி வழிபடும் ஆச்சர்ய நிகழ்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஐயப்ப சுவாமி வளர்ந்த இடமான பந்தளத்தில் இருந்து கடந்த12-ம் தேதி புறப்பட்ட திருவாபரணம் மகரவிளக்கு தினமான நேற்று (14-ம் தேதி) சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து மகரஜோதி தரிசனம் நடைபெற்றதும்.
வரும் 7 நாள்கள் திருவாபரண அலங்காரத்தில் சபரிமலை ஐயப்ப சுவாமி காட்சிதருவார். பின்னர் சபரிமலையில் இருந்து திருவாபரணங்கள் மீண்டும் புறப்பட்டு பத்தனம்திட்டா மாவட்டத்தில் ரானி என்ற இடத்துக்கு அருகே அமைந்துள்ள பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலிலுக்கு கொண்டுச் செல்லப்படுகிறது. ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட அதே திருவாபரணங்கள் பெருநாடு தர்மசாஸ்தாவுக்கு அணிவிக்கப்படும்.
இந்த நிகழ்வு வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. சபரிமலையில் ஐயப்ப சுவாமியின் திருவாபரண காட்சியை தரிசிக்க இயலாத பக்தர்களுக்கு மற்றொரு வாய்ப்பாக பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தாவுக்கு அதே ஆபரணங்கள் சார்த்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா கோயில்தான் சபரிமலைக்கு மூலஸ்தானம் என கருதப்படுவதால் இந்த ஆச்சர்ய நிகழ்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது என்கிறார்கள்.
இதுபற்றி பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா கோயில் ஆலோசனைக்குழு துணைத்தலைவர் மனோகரன் நாயர் கூறுகையில், "ரானி பெருநாட்டில் உள்ள ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலில் சபரிமலையில் உள்ளது போன்றே ஐயப்பன் யோக நிலையில் சின்முத்ராதாரியாக அமர்ந்து காட்சிதருகிறார். ஐயப்ப சுவாமியின் விருப்பப்படி சபரிமலையில் கோயில் அமைப்பதற்காக பந்தளம் மஹாராஜா ரானி பெருநாட்டில் தங்கியிருந்து அந்த பணிகளை மேற்கொண்டார்.
சபரிமலை கோயில் அமைப்பதற்கு முன்பு ஐயப்ப சுவாமி கோயிலை நிர்மாணித்து, தினசரி பூஜைகளை மேற்கொண்ட புண்ணிய ஸ்தலமாகும் பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா கோயில். நைஸ்டிக பிரம்மச்சாரியான ஐயப்ப சுவாமியை அனைத்து வயது பெண்களும் இத்திருத்தலத்தில் தரிசிக்கலாம். அதனால்தான் பெண்களின் சபரிமலை என பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா கோயில் அழைக்கப்படுகிறது.
பந்தளம் மஹாராஜா ஐயப்ப சுவாமிக்கு வழங்கிய திருவரணங்கள் கடந்த மகரவிளக்கு காலத்தில் சபரிமலையில் சாற்றப்படும். 7 நாள்கள் சபரிமலை ஐயப்ப சுவாமிக்கு திருவபரணங்கள் சாற்றப்பட்ட பிறகு மீண்டும் பந்தளம் கோயிலுக்கு கொண்டுசெல்லும் வழியில் பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு சுவாமிக்கு சாற்றப்படும். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த அபூர்வ நிகழ்வு இந்த வருடம் வரும் 21-ம் தேதி நடைபெறுகிறது. அன்று மதியம் 2 மணிமுதல் இரவு 2 மணி வரை திருவாபரணங்கள் சாற்றப்பட்டு பெருநாடு ஸ்ரீதர்மசாஸ்தா காட்சிதருகிறார். திருவாபரண காட்சியை அனைத்து வயது பெண்களும் தரிசிக்கலாம்" என்றார்.