அமித் ஷா பதவி விலகும்வரை போராட்டம் தொடரும்: கிருஷ்ணகிரி எம்.பி.
12 அடி உயரம்; ஆண்டு முழுவதும் அறுவடை; ஆர்கானிக் கொடி தக்காளி - எப்படி வளர்ப்பது?
நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த தேவ் என அழைக்கப்படும் தேவ குமார். அடிப்படையில் பாதுகாப்புத்துறை மாணவர். விவசாயக் குடும்பப் பின்னணி மற்றும் இயற்கை விவசாய ஆர்வம் காரணமாக 17 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை விவசாயத்தில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகிறார்.
குன்னூரில் உள்ள `செர்ரி பெர்ரி' என்ற தனியார் பண்ணையில் வேளாண் சுற்றுலா மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இயற்கை விவசாயத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
பண்ணையில் முக்கால் ஏக்கர் பரப்பளவில் ஆர்கானிக் பசுமைக் குடில் அமைத்து பல்வேறு பயிர்களைச் சாகுபடி செய்துவருகிறார். ஆண்டு முழுவதும் அறுவடை செய்யக்கூடிய இரண்டு வகையான கொடி தக்காளிகளை இயற்கை முறையில் உற்பத்தி செய்து வருவதுடன், மக்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் வளர்க்க முன்வரவேண்டும் என்ற நோக்கத்தில் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
நம்மிடம் பேசிய தேவ், " கொஞ்சம் கொஞ்சம் வாய்ப்பு இருப்பவர்களும் தற்சார்பு உணவு உற்பத்தியில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் பணியாற்றும் இந்தப் பண்ணையில் பல்வேறு காய்கறிகள், பழங்கள், மூலிகை தாவரங்கள் போன்றவற்றை இயற்கை முறையில் உற்பத்தி செய்து வருகிறோம். அதோடு வேளாண் சுற்றுலாவிற்கு வருபவர்களிடம் இயற்கை வேளாண்மை குறித்து விளக்கி வருகிறோம்.
அன்றாடம் நாம் உணவில் பயன்படுத்தும் தாக்காளியைக் குறைந்த இடத்தில் உற்பத்தி செய்வதற்கான வரப்பிரசாதமாக இருக்கிறது கொடி தக்காளி ரகங்கள். பிரெஞ்சு வகையைச் சேர்ந்த பெமரிடோ மற்றும் செர்ரி ஆகிய இரண்டு ரக தக்காளிகளை விதைத்தால் அடுத்த இரண்டரை மாதத்தில் அறுவடைக்குத் தயாராகும். அதிலிருந்து சுமார் ஓர் ஆண்டு வரை தொடர்ந்து அறுவடை செய்யலாம்.
7 முதல் சுமார் 12 அடி உயரம் வரை வளரக்கூடியது. பூச்சிகளைக் கட்டுப்படுத்த மட்டும் இயற்கை பூச்சி விரட்டிகளை மாதம் இருமுறை தெளித்தால் போதுமானது. ஒரு கொடியில் 5 கிலோ வரை மகசூல் கிடைக்கும். பெரமிடோ தக்காளிகளைப் பொறுத்தவரை பறித்த 15 நாட்கள் வரை அழுகாமல் இருக்கும்.
குறைந்த தண்ணீர் செலவில் வீட்டுத்தோட்டம் முதல் மாடித் தோட்டம் வரை எங்கு வேண்டுமானாலும் கொடியை பரவிவிட்டு வளர்க்கலாம். ஒருமுறை விதை வாங்கினால் போதும். அடுத்தடுத்து பழங்களில் இருந்தே விதைகள் கிடைக்கும். அனைவரின் வீடுகளிலும் காட்டாயம் இடம்பெற வேண்டிய ஒன்று. வணிக நோக்கில் பயிர் செய்தாலும் சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கிறது " என்றார்