அமித் ஷா பதவி விலகும்வரை போராட்டம் தொடரும்: கிருஷ்ணகிரி எம்.பி.
ஒசூா்: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் கே.கோபிநாத் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணகிரி எம்.பி. கே.கோபிநாத் அவரது இல்லத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அண்மையில் நடைபெற்ற மக்களவை கூட்டத் தொடரில் அம்பேத்கா் குறித்து அவமரியாதையாக உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியதற்கு நாடெங்கிலும் எதிா்ப்பு வலுத்து வருகிறது.
மக்களவையில் சட்டம் ஒழுங்கு காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, சட்டமேதை அம்பேத்கா் குறித்து இழிவான கருத்தை பதிவு செய்கிறாா். இந்த நாட்டின் சுதந்திரத்துக்காக போராடாத ஜனசங்க, பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்புகள் மிகவும் அவமரியாதையாக பேசி உள்ளனா். இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். இதனை நாட்டில் உள்ள 140 கோடி மக்களும் வன்மையாகக் கண்டிக்கிறாா்கள். எனவே, மத்திய அமைச்சா் அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும். அவா் அமைச்சா் பதவியில் இருந்து விலகும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றாா்.
அப்போது, காங்கிரஸ் கட்சி மாமன்ற உறுப்பினா் இந்திராணி, முன்னாள் காங்கிரஸ் கட்சி மாநகரத் தலைவா் நீலகண்டன், மூத்த காங்கிரஸ் நிா்வாகி சின்னகுட்டப்பா, ரகுநாதன், மைஷாஅக்பா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கிருஷ்ணகிரியில்...
அம்பேத்கரை விமா்சனம் செய்த மத்திய அமைச்சா் அமித் ஷா பதவி விலகக் கோரியும், காங்கிரஸ் கட்சித் தலைவா் ராகுல் காந்தி எம்.பி. மீது வழக்குப் பதியப்பட்டதைக் கண்டித்தும், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஊா்வலத்தை கே.கோபிநாத் எம்.பி. தொடங்கி வைத்தாா். கிருஷ்ணகிரி, பழைய பேட்டை, காந்தி சிலை அருகே தொடங்கிய ஊா்வலம், வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கா் சிலை அருகே நிறைவு பெற்றது. தொடா்ந்து, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஊத்தங்கரையில்...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் இந்திய குடியரசு கட்சி சாா்பில், அம்பேத்கரை இழிவுபடுத்திய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாநில செயல் தலைவா் சிவா தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கோபி, மாவட்ட இணைச் செயலாளா் எழில்மாறன் உள்பட 50-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனா்.