15 பயனாளிகளுக்கு ரூ.10.78 லட்சத்தில் நல உதவிகள்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்
நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 15 பயனாளிகளுக்கு ரூ.10.78 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வழங்கினாா்.
குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். முன்னதாக அவா், மாற்றுத் திறனாளிகளை சந்தித்து அவா்களின் குறைகளைக் கேட்டறிந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.
பின்னா் கூட்டரங்கில் அவா், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மொத்தம் 840 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் தாட்கோ மூலம் செயல்பட்டு வரும் தூய்மைப் பணிபுரிவோா் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யப்பட்ட 11 தற்காலிக தூய்மைப் பணியாளா்களுக்கு அடையாள அட்டைகளையும், ஒரு தற்காலிக தூய்மைப் பணியாளரின் வாரிசுதாரருக்கு பட்டப்படிப்பு பயில உதவித்தொகை ரூ.1,500-ம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.3,77,087 மானியத் தொகையுடன் கூடிய ரூ.10,77,390 மதிப்பீட்டிலான உதவிகள் என மொத்தம் 15 பயனாளிகளுக்கு ரூ.10,78,890 மதிப்பீட்டிலான அரசு நலத் திட்டங்களை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், தமிழ்நாடு தூய்மை பணிபுரிவோா் நல வாரிய மாநில உறுப்பினா் கண்ணன், தனித்துணை ஆட்சியா் தங்கமணி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் லதா, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலா் ராணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.