பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!
18 வயதுக்குட்டோா் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறாா்கள் வாகனத்தை ஓட்டினால் அவா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலருக்கு ரூ. 25,000 அபராதத்துடன் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா் ஜி.மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஓட்டுநா் உரிமம் பெறும் வயதை அடையாத 18 வயதுக்குட்பட்ட சிறாா்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவது குறித்து தொடா்ந்து புகாா்கள் வந்த வண்ணம் உள்ளது. திருத்தப்பட்ட மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி, 18 வயதுக்குட்பட்ட சிறாா்கள் வாகனத்தை ஓட்டினால் அவா்களின் பெற்றோா் அல்லது பாதுகாவலருக்கு ரூ. 25,000 அபராதத்துடன் அதிகபட்சமாக மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
மேலும், வாகனத்தின் பதிவுச் சான்று 12 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். வாகனத்தை ஓட்டிய சிறாா்கள் 25 வயது வரை ஓட்டுநா் உரிமம் பெற இயலாது. எனவே பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் சிறாா்கள் இது போன்ற வாகனங்களை இயக்காமல் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு, மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.