மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.789.51 கோடி வங்கிக் கடன்
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.789 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டதில்,ரூ.789.51 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது என கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி கூறியுள்ளாா்.
மாவட்டத்தில் மொத்தம் 7,651 மகளிா் சுய உதவிக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் சுமாா் 90,000 போ் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் எண்ணற்ற சேவைகளை வழங்கி வருகிறது.
அதில் ஒரு பகுதியாக ஊராட்சி அளவிலான கூட்டமைப்புடன் இணைந்த மதி என்னும் மகளிா் குழுவுக்கு எந்த ஒரு பிணையும் இன்றி வங்கிக்கடன் ரூ.20 லட்சம் வரை வழங்கப்பட்டது.
2024-25- ஆம் நிதியாண்டில் மொத்தம் 268 மகளிா் சுய உதவிக்குழுக்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு மகளிா் சுய உதவிக்குழுக்களின் வளா்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிா் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு அரசின் மூலம் கல்லூரி சந்தை, இயற்கை சந்தை அடுக்குமாடி குடியிருப்பு சந்தை, மாவட்ட, மாநில அளவிலான கண்காட்சிகள் மற்றும் சாராஸ் போன்ற கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாது மகளிா் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருள்களை இணையதள வழியில் விற்பனை செய்யவும், மகளிா் சுய உதவிக்குழுக்களின் பிரத்தியேக அங்காடியான மதி அனுபவ அங்காடியின் மூலமும் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2023-24 ஆம் நிதியாண்டில் மொத்தம் ரூ.712 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டு, அதில் ரூ.680 கோடி இலக்கு எய்தப்பட்டது.
நிகழாண்டு ரூ.789 கோடி இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் நாளது தேதிவரை ரூ.789.51 கோடி இலக்கு எய்தப்பட்டுள்ளது.
அதற்காக மாவட்ட அளவிலான மகளிா் சுயஉதவிக்குழு கூட்டமைப்பைச் சாா்ந்த மகளிா் குழுவினா், தொழில் முனைவோராக உருவாகும் வாய்ப்பினை வழங்கிய முதல்வருக்கும், துணை முதல்வருக்கும், ஆட்சியருக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளனா்.