1947-ல் சுதந்திரம் பெறவில்லை எனக் கூறுவது அவமதிக்கும் செயல்: மோகன் பாகவத்துக்கு ராகுல் பதிலடி!
இந்தியா 1947-ஆம் ஆண்டில் சுதந்திரம் பெறவில்லை எனக் கூறுவது ஒவ்வொரு இந்தியரையும் அவமதிக்கும் செயல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தில்லியில் தீன் தயாள் உபாத்யா சாலையில் 2009 ஆம் ஆண்டிலிருந்து கட்டப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான இந்திரா காந்தி பவனை புதன்கிழமை காங்கிரஸ் எம்பி சோனியா காந்தி குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தார்.
இந்த நிகழ்வில் காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலர்கள் பிரியங்கா காந்தி, சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும், காங்கிரஸ் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் புதிய தலைமை அலுவலகம் திறப்பு: ராகுல், சோனியா பங்கேற்பு!
இந்த நிகழ்வில் ராகுல் காந்தி பேசுகையில், “1947-ல் இந்தியா சுதந்திரம் பெறவில்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறிய கருத்து ஒவ்வொரு இந்தியரை அவமதிக்கும் செயல். ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்ததாக மோகன் பாகவத் கூறிய கருத்து தேசத்துரோகமாகும்.
குற்றங்களை விசாரிக்க வேண்டிய புலனாய்வு அமைப்புகளே எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன. பாஜகவின் கருத்துகள் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தாக்குதலை ஏற்படுத்தி இருக்கின்றன. நமது நாட்டில் இருவிதமாக கருத்து மோதல்கள் இருக்கின்றன. அவை அரசியலமைப்பு மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே ஏற்பட்டுள்ளன.
மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா பேரவைத் தேர்தலில் தகவல்களைத் தருவது தேர்தல் ஆணையத்தின் கடமை. ஆனால், அவர்கள் எங்களுக்குத் தர மறுத்துவிட்டனர்” என்றார்.