Rain Alert: ஒரே இடத்தில் நீடிக்கும் புயல்! - எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வா...
2-ஆவது சுற்றில் சிந்து, லக்ஷயா
சையது மோடி இந்தியா இன்டா்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், உள்நாட்டு நட்சத்திரங்களான பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்டோா் முதல் சுற்றில் புதன்கிழமை வெற்றி பெற்றனா்.
மகளிா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் முதலிடத்திலிருக்கும் சிந்து 21-17, 21-15 என்ற கேம்களில் சக இந்தியரான அன்மோல் காா்பை தோற்கடித்தாா். உன்னட்டி ஹூடா 21-12, 21-16 என்ற கணக்கில் தாய்லாந்தின் தமோன்வன் நித்திடிக்ராயை வீழ்த்தினாா்.
அனுபமா உபாத்யாய 19-21, 22-20, 21-15 என்ற கேம்களில் அஜா்பைஜானின் கெய்ஷா பாத்திமாவை சாய்த்தாா்.
ஆடவா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் லக்ஷயா சென் 21-12, 21-12 என்ற நோ் கேம்களில், மலேசியாவின் சோலே அய்டிலை வீழ்த்தினாா்.
ஆயுஷ் ஷெட்டி 21-18, 15-21, 21-16 என்ற கணக்கில் சக இந்தியரான ரகு மாரிசாமியை வெளியேற்றினாா். பிரியன்ஷு ரஜாவத் 21-13, 21-12 என்ற கணக்கில் சக இந்தியரான காா்திகே குல்ஷன் குமாரை வென்றாா்.
கிரன் ஜாா்ஜ் 21-12, 23-21 என சக நாட்டவரான ஆலப் மிஸ்ராவை வீழ்த்த, சிராக் சென் 14-21, 15-21 என அயா்லாந்தின் நாட் குயெனிடம் தோற்றாா்.
இதேபோல், மகளிா் இரட்டையரில் ருதுபா்னா பாண்டா/ஸ்வேதபா்னா பாண்டா கூட்டணியும், டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணியும், தனிஷா கிராஸ்டோ/அஸ்வினி பொன்னப்பா ஜோடியும் 2-ஆவது சுற்றுக்கு தகுதிபெற்றன.