20 Years of Dhoni: `தலைமுறைகளின் கனவை நிஜமாக்கிய நாயகன்' - ஒரு விரிவான பார்வை
ஒரு பயணத்தை எப்படி தொடங்குகிறோம் என்பது முக்கியமல்ல. அதை எப்படி முடிக்கிறோம் என்பதுதான் முக்கியம். இந்தக் கதையாடலுக்கு உதாரணமாக சொல்ல உகந்த பெயர் தோனிதான்.
சரித்திரத்தின் தொடக்கம்
2004 டிசம்பர் 23, அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் 23 வயதில் தோனி இந்திய அணிக்காக அறிமுகமாகியிருந்தார். சட்டோகரமில் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த அந்தப் போட்டியில் தோனி டக் அவுட். அதுவும் ரன் அவுட். இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்பது கோடிக்கணக்கான சாமானிய இளைஞர்களின் வாழ்நாள் கனவு. தோனி அந்த கனவிற்காக கடினமாக உழைத்தவர் வேறு. ராஞ்சியின் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இரயில்வே பணியை இதற்காகவே துறந்தார். அப்படிப்பட்ட ஒரு வீரருக்கு முதல் போட்டியையே ஜீரோவில் தொடங்க வேண்டிய சூழல் வந்தால் எப்படியிருக்கும்? உலகமே இருண்டு போனதைப்போல இருக்கும். உடைந்து போய்விடுவார். தோனிக்கும் அப்படியெல்லாம் இருந்தது. ஆனாலும் விரைவிலேயே மீண்டு வந்தார்.
தனக்குக் கிடைத்த அடுத்தடுத்த வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். அந்த ஆரம்பக் கட்டத்திலேயே பாகிஸ்தானுக்கு எதிரான அவரின் 148 இன்னிங்ஸையும், ராஜஸ்தானில் இலங்கைக்கு எதிராக அடித்த 183* இன்னிங்ஸையும் இன்றைக்கும் மறக்கமுடியாது.
நீண்ட முடியோடு ஓர் இளைஞன்
நீண்ட முடியோடு ஒரு சுவாரஸ்யமான டி20 போட்டிக்கான பரபரப்பை அன்றைக்கே கொடுத்திருந்தார். அந்த இன்னிங்ஸ்கள்தான் அவரை இந்திய அணிக்குள் நிரந்தரமாக இடம்பிடிக்க வைத்தது.
இந்தக் காலக்கட்டத்தில் அவர் வைத்திருந்த நீளமான முடி, ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் பால் குடிப்பார் தெரியுமா என்பது போன்ற வதந்திகள், எதற்கும் அஞ்சாத அதிரடியான ஆட்டம் என எல்லாமும் அவரை சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அவரை ஸ்டாராக கொண்டு சேர்த்தது. அதேமாதிரி, தோனியின் வாழ்க்கைப் பின்னணியை எல்லோராலும் தொடர்பும் படுத்திக்கொள்ள முடியும். கிரிக்கெட் பாரம்பர்யமிக்க குடும்பத்திலிருந்தோ நகரத்திலிருந்தோ அவர் வரவில்லை. பழங்குடிகளும் பிற்படுத்தப்பட்ட மக்களும் அதிகம் வாழும் பின்தங்கிய பகுதிகளிலிருந்து அவர் புறப்பட்டு வந்தார். இந்தியாவின் பெரும்பாலான சாமானிய மக்களின் பிரதிநிதியாக பார்க்கப்பட்டார்.
கனவை வசப்படுத்திய நாயகன்
இப்படியிருந்த இளைஞனை இந்திய அணி தலைவனாக நம்பத் தொடங்கியது 2007ல் தான். 2007 ஓடிஐ உலகக்கோப்பையில் இந்தியா மோசமாக தோற்றிருந்த அதே சமயத்தில் டி20 உலகக்கோப்பையும் அறிமுகப்படுத்தப்படுகிறது. சச்சின் உட்பட இந்திய அணியின் சீனியர்கள் எல்லாம் ஒதுங்கிக் கொள்கிறார்கள். அணிக்கு அறிமுகமாகி முழுமையாக மூன்று ஆண்டுகளை நிறைவு செய்திடாத தோனியை இந்திய அணியின் கேப்டன் ஆக்குகிறார்கள். இந்திய அணியும் தென்னாப்பிரிக்கா பறந்து வெற்றியோடு திரும்புகிறது. உலகக்கோப்பையோடு தோனி இந்தியா வந்திறங்கினார். அரபிக்கடலின் காற்று வீசும் மும்பை நகர வீதிகளில் இந்திய அணி உலகக்கோப்பையோடு உலா வந்தபோது, ரசிகர்கள் அத்தனை பேரின் மனதிலும் தோனி ஒரு தலைவனாக குடிக்கொண்டார்.
கேப்டனாக இந்திய அணிக்கு புதிய குணாதிசயத்தை தோனி கொடுத்தார். ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலியாவில் வைத்தே காமென்வெல்த் பேங்க் சீரிஸில் இந்தியா வீழ்த்தும். அப்போது இந்திய அணியின் எந்த வீரரையும் தோனி கொண்டாட்டத்தில் ஈடுபடக் கூடாது எனக் கூறியிருப்பார்.
அதற்குக் காரணமும் கூறியிருந்தார். ``அவர்களை வீழ்த்தியதை பெரிய விஷயமாக கொண்டாடிய காலமெல்லாம் இருக்கட்டும். இப்போதும் நாம் அப்படி கொண்டாட வேண்டிய தேவையில்லை. வென்றவுடன் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஆஸ்திரேலிய வீரர்களுடன் கையை மட்டும் குலுக்கிவிட்டு வாருங்கள். அவர்களை வெல்வது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமில்லை என்பதை உணர்த்துவோம்.' என தோனி கூறியிருந்தார். உலகக்கோப்பைகளில் வீழ்த்தவே முடியாதென்ற இமேஜை கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணியை 2007, 2011 என இரண்டு உலகக்கோப்பைகளிலும் நாக் அவுட்டில் இந்திய அணி வீழ்த்தியிருக்கும். அதற்கு தோனியின் 'அவர்கள் ஒன்றும் வீழ்த்த முடியாதவர்கள் இல்லை.' என்கிற மனநிலைதான் காரணம்.
`பயமா எனக்கா' - அசாத்தியங்களை உடைத்த வீரன்
2007 க்குப் பிறகு தோனிக்கான மாபெரும் சவால் 2011 தான். 1996 க்குப் பிறகு மீண்டும் உலகக்கோப்பைத் தொடர் இந்தியாவிலும் நடக்கிறது. இந்திய அணியும் ஓடிஐ உலகக்கோப்பையை வென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தோனியும் தன்னால் ஒரு உலகக்கோப்பையை வென்றுக் காட்ட முடியும் என நிரூபித்திருக்கிறார் என்பதால் இந்திய அணியின் மீது பெரும் எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்த உலகக்கோப்பையிலும் தோனி தனது கேப்டன்சி திறனை ஆகச்சிறப்பாக வெளிக்காட்டியிருப்பார். அணியை சுழற்சி முறையில் இந்தியாவின் ஒவ்வொரு மைதானங்களுக்கும் ஏற்ற வகையில் தேர்வு செய்தார். அஷ்வின், ஸ்ரீசாந்த், முனாப் படேல், நெஹ்ரா என பௌலர்களை சூழலுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தினார். இறுதிப்போட்டியில் தன்னையே ஒரு அழுத்தமான சூழலில் தள்ளிக் கொண்டு இந்தியாவுக்கான மேட்ச் வின்னிங் இன்னிங்ஸையும் ஆடிக்கொடுத்தார்.
எதிர்கால இந்திய அணிக்கான திட்டமிடல்
உலகக்கோப்பையை வென்றது தோனியின் மாபெரும் சாதனையாக இருந்தாலும் அதற்கு பின் அணிக்குள் தோனி செய்த பணிகள்தான் இன்னும் பாராட்டப்பட வேண்டியவை. அணியின் சீனியர்கள் அத்தனை பேரையும் மெது மெதுவாக ஓரங்கட்டி விட்டு அணிக்குள் இளம் வீரர்களைக் கொண்டு வந்தார். அடுத்தத் தலைமுறைக்கான அணியை கட்டமைக்கத் தொடங்கினார். அந்தக் காலக்கட்டத்தில் தோனியின் மீது கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது. ஆனால், அந்த 2011 உலகக்கோப்பைக்குப் பிறகு தோனி அணிக்குள் செய்த மாற்றங்கள்தான் இன்றைக்கும் இந்திய அணியை தொய்வில்லாமல் ஓட வைத்துக் கொண்டிருக்கிறது. தான் கட்டமைத்த இளம் அணியை வைத்தே 2013 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றார்.
எவ்வளவு உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் அவர்களும் தன்னுடைய நிலை கீழே இறங்கும் சமயத்தில் சரியாக கணித்து விடைபெற வேண்டும். அதையும் தோனி செய்தார். தனக்குப் பின் கோலி மிகப்பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறார் என்பதை உணர்ந்தவுடன் கேப்டன்சியை அவர் கைக்கு மாற்றிவிட்டார். அதேமாதிரி, 2019 உலகக்கோப்பைக்கு பின் இந்திய அணி தன்னைக் கடந்து யோசிக்க ஆரம்பிக்கும் என்பதை யூகித்து தானாகவே அணியிலிருந்து வெளியேறி ஓய்வையும் அறிவித்தார்.
'நான் மரபார்ந்த கிரிக்கெட்டை ஆடவில்லை. நான் ஆடும் விதத்தைப் பார்த்து எல்லாராலும் ஆட முடியும். அதனால்தான் மக்கள் என்னை அவர்களில் ஒருவராக தொடர்புப்படுத்திக் கொள்கிறார்கள்.' என தோனி ஒரு முறை பேசியிருந்தார். கிரிக்கெட் ஆடும் விதத்தில் மட்டுமில்லை. குறிப்பிட்ட சாரார் மட்டுமே வெல்ல முடியுமென்றிருந்த ஒரு துறையில் தடைகளையெல்லாம் தாண்டி ஒரு சாமானியனும் வெல்ல முடியும் என்கிற நம்பிக்கையை கொடுத்ததற்காகவும் தான், தோனியை மக்கள் தங்களில் ஒருவனாகப் பார்க்கிறார்கள்.
தோனி ஆட்டம் மற்றும் கேப்டன்சி குறித்த உங்களின் கருத்துகளை கமென்ட்டில் பதிவிடுங்கள்!