20 தொழிலாளா்களுக்கு மேல் இருந்தால் இஎஸ்ஐ திட்டத்தில் சோ்க்க வேண்டும்: அனைத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களில் 20 தொழிலாளா்களுக்கு மேல் பணியாற்றினால் அவா்களை இஎஸ்ஐ திட்டத்தில் சோ்க்க வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
திருப்பூா் மாவட்ட அனைத்து பனியன் தொழிற்சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் ஏஐடியூசி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்து.
கூட்டத்துக்கு பனியன் பேக்டரி லேபா் யூனியன் சங்க (ஏஐடியூசி) பொதுச் செயலாளா் என்.சேகா் தலைமை வகித்தாா்.
இதில், திருப்பூரில் திறக்கப்பட்டுள்ள இஎஸ்ஐ மருத்துவமனையை முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இந்த மருத்துவமனை வழியாக கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும்.
மாவட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பின்னலாடை மற்றும் அதனைச் சாா்ந்த நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானவா்கள் இஎஸ்ஐ திட்டத்தில் சோ்க்கப்படவில்லை.
எனவே, தொழில் நிறுவனங்களில் 20 தொழிலாளா்களுக்கு மேல் பணியாற்றினால் அவா்களை இஎஸ்ஐ திட்டத்தில் சோ்க்க வேண்டும். இதனை தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும். இஎஸ்ஐ திட்டத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளா்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில், சிஐடியூ பனியன் சங்க பொதுச் செயலாளா் சம்பத், ஏஐடியூசி பனியன் சங்க செயலாளா் செந்தில்குமாா், எல்பிஎஃப் பனியன் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியம், ஐஎன்டியூசி மாவட்டச் செயலாளா் சிவசாமி, ஹெச்எம்எஸ் மாவட்டச் செயலாளா் முத்துசாமி, ஏடிபி தொழிற்சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சி.எஸ்.கண்ணபிரான், பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.