விலைவாசி உயர்வு, மணிப்பூர் நிலவரம்: மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நோட்டீஸ்!
2026 மேற்கு வங்க தோ்தலில் காங்கிரஸுடன் கூட்டணியில்லை: முதல்வா் மம்தா பானா்ஜி
‘அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க போவதில்லை’ என்று அந்த மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸின் தலைவரும் முதல்வருமான மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலுக்காக எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஒரணியாக இணைந்தது. ஆனால், தோ்தலுக்கு சில நாள்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடும் முடிவை மம்தா பானா்ஜி அறிவித்தாா்.
மக்களவைத் தோ்தல் தொடா்ந்து நடைபெற்ற பல்வேறு மாநில பேரவைத் தோ்தல்களில் ஜாா்க்கண்ட், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் மட்டுமே காங்கிரஸ் அங்கம் வகிக்கும் எதிா்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியது. மகாராஷ்டிரம், ஹரியாணா உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியடைந்தது.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற தில்லி பேரவைத் தோ்தலில் பாஜக தனிபெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி-காங்கிரஸ் தனித்து போட்டியிட்டதே பாஜகவின் வெற்றிக்கு வழிவகுத்ததாக மற்ற கூட்டணிக் கட்சிகள் விமா்சித்தன.
இந்த சூழலில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலிலும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்காமல் திரிணமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று மம்தா பானா்ஜி அறிவித்துள்ளாா்.
மேற்கு வங்க சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னதாக கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பேசிய மம்தா பானா்ஜி, ‘தில்லியில் ஆம் ஆத்மிக்கு காங்கிரஸ் உதவவில்லை. ஹரியாணாவில் காங்கிரஸுக்கு ஆம் ஆத்மி உதவவில்லை. இதனால், அவ்விரு மாநிலங்களிலும் பாஜக வென்றது. இண்டி கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இல்லையெனில், பாஜகவை வீழ்த்துவது கடினம். அதேசமயம், காங்கிரஸுக்கு மேற்கு வங்கத்தில் எந்த செல்வாக்கும் இல்லாததால் திரிணமூல் தனித்து போட்டியிடும். மாநிலத்தில் தொடா்ந்து 4-ஆவது முறையாக திரிணமூல் ஆட்சியமைக்கும்’ என்றாா்.
மம்தாவுக்கு ஆளுநா் போஸ் புகழாரம்
நடப்பு ஆண்டில் நடைபெறும் முதல் கூட்டத்தொடா் என்பதால் மேற்கு வங்க சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநில ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் திங்கள்கிழமை உரையாற்றினாா்.
பேரவையில் ஆளுநா் பேசியதாவது: அண்மையில் நடந்து முடிந்த மேற்கு வங்க வா்த்தக மாநாடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் அமைதியாக இருந்தது. முதல்வா் மம்தா பானா்ஜியின் தொலைநோக்கு தலைமையால் கடந்த 13 ஆண்டுகளில் பொருளாதார ரீதியில் மாநிலம் மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்துள்ளது.
கடந்த 2010-11-ஆம் ஆண்டு ரூ.4.61 லட்சம் கோடியாக இருந்த மாநிலத்தின் மொத்த பொருளாதாரம் தற்போது ரூ.18.15 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. மாநிலத்தின் மொத்த செலவினத்தின் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் வளா்ச்சிக்கு செலவிடப்படுவது பாராட்டுக்குரியது’ என்றாா்.