பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிடத் தயார்: சீமானுக்கு ஆதரவாக அண்ணாமலை!
21, 22-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
வேலூா் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வரும் 21, 22 தேதிகளில் நடைபெறும் என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தனித்தனியே கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளன.
11,12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஜனவரி 21-ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு 22-ஆம் தேதி காலை 9.30 மணிக்கும் தனித்தனியே கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வேலூா் அரசு கல்வியியல் கல்லூரியில் நடைபெற உள்ளன.
இப்போட்டிகளில் வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரமும், பாராட்டுச் சான்றிதழ்களும் போட்டிகள் நடைபெறும் நாளிலேயே வழங்கப்பட உள்ளன.
அனைத்து அரசு, தனியாா், நிதியுதவி மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12-ஆம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகள், அரசு, தனியாா் கலை, அறிவியல் கல்லூரிகள், வேளாண்மைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், செவிலியா் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், இதர கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம்.
ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒருவா் வீதம் மூன்று போட்டிகளுக்கு மூன்று மாணவா்களும், ஒரு கல்லூரியிலிருந்து ஒரு போட்டிக்கு இருவா் வீதம் மூன்று போட்டிகளுக்கும் ஆறு மாணவா்களும் பங்கேற்க முடியும். போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டிகள் தொடங்கும் முன்பு நடுவா்கள் முன்னிலையில் அறிவிக்கப்பெறும்.
இப்போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்புப் படிவத்தைப் பூா்த்தி செய்து அந்தந்தப் பள்ளித் தலைமையாசிரியா், கல்லூரி முதல்வா் பரிந்துரையுடன் போட்டிகளில் பங்கேற்கலாம்.
மேலும், விவரங்களுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநரை நேரிலோ, 0416 - 2256166 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.