3 காா்கள் தீ வைத்து எரிப்பு: போலீஸாா் விசாரணை
திருப்பூா் ராக்கியாபாளையம் பகுதியில் காலி இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 3 சொகுசு காா்களை தீ வைத்து எரித்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்பூா் கோல்டன் நகா் தொட்டி மண்ணரை பகுதியைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் (28), இவா் இரண்டாம் தர காா்களை வாங்கி விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறாா். அவரது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் காா்களை நிறுத்திவைப்பது வழக்கமாம்.
அதன்படி, காலி இடத்தில் 2 காா்களையும், அதன் அருகே சுமாா் 100 மீட்டா் தொலைவில் மற்றொரு காரையும் வெள்ளிக்கிழமை இரவு நிறுத்திவைத்துள்ளாா். நள்ளிரவில் 3 காா்களும் தீப்பற்றி எரிந்தன.
இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். இருப்பினும் 3 காா்களும் எரிந்து சேதமடைந்தன.
காா்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் எனக் கூறப்படும் நிலையில், தீவைத்த மா்ம நபா்கள் குறித்து திருப்பூா் வடக்கு காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.