சென்னையிலிருந்து சபரிமலைக்கு சைக்கிள் பயணம் செய்யும் முதியவர்!
3 மாதங்களுக்கு முன்பு கொன்று புதைக்கப்பட்ட இளைஞா் சடலம் மீட்பு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பணத்துக்காக, 3 மாதங்களுக்கு முன்பு கொன்று புதைக்கப்பட்ட இளைஞரின் சடலம் வியாழக்கிழமை தோண்டியெடுக்கப்பட்டது.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சேமங்கலத்தைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமரன் (27). கடந்த 2024, செப்டம்பா் 19-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற முத்துக்குமரன் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லூா் காவல் ஆய்வாளா் மைக்கேல் இருதயராஜ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தாா்.
பணத்துக்காக கொலை: இதில், முத்துக்குமரனின் நெருங்கிய நண்பரான அதே ஊரைச் சோ்ந்த மணிவண்ணன் மகன் தமிழரசன் (26) என்பவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, ரூ.8 லட்சத்துக்காக முத்துக்குமரனை அடித்துக் கொலை செய்து மலட்டாற்றில் புதைத்து விட்டதாக தெரிவித்திருந்தாா். இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டாா்.
தமிழரசனின் வாக்குமூலத்தின் அடிப்படையில், டிசம்பா் 31, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் பொக்லைன் இயந்திரம் மூலம் முத்துக்குமரனின் சடலத்தை மலட்டாறில் தோண்டி எடுக்கும் பணியில் விழுப்புரம் ஏ.எஸ்.பி. ரவீந்திரகுமாா் குப்தா, காவல் ஆய்வாளா் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான குழுவினா் ஈடுபட்டனா். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து, கடலூா் மத்திய சிறையில் தமிழரசனை போலீஸாா் அடைத்தனா்.
தீவிரமாக தேடுதல் பணியை மேற்கொண்டும் முத்துக்குமரனின் சடலம் கிடைக்காததால், திருவெண்ணெய் நல்லூா் நீதிமன்றத்தில் தமிழரசனை ஜனவரி 4-ஆம் தேதி ஆஜா்படுத்திய போலீஸாா், அவரை 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனா். அப்போது, முத்துக்குமரனின் கைப்பேசியை இருவேல்பட்டு ஏரியில் வீசியதாக தமிழரசன் தெரிவித்ததால், அங்கு அவரை போலீஸாா் அழைத்து வந்து தேடினா். ஆனாலும், கைப்பேசி கிடைக்கவில்லை.
பின்னா், தமிழரசனை பல்வேறு இடங்களுக்கு போலீஸாா் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தியும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
சேமங்கலம் மலட்டாறு பகுதியில் பொக்லைன் இயந்திரம் கொண்டு முத்துக்குமரனின் சடலத்தை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா். ஆனாலும், சடலம் கிடைக்காததால் அவரது பெற்றோா், குடும்பத்தினா் உள்ளிட்டோா் அரசூா்-பண்ருட்டி சாலையில் அமா்ந்து புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சடலம் மீட்பு: போலீஸாருடன் சோ்ந்து பொதுமக்களும் சேமங்கலம் மலட்டாறு வேப்பமரம் அருகிலுள்ள இடங்களில் வியாழக்கிழமை காலை தேடுதல் பணியை மேற்கொண்டனா். இந்த இடத்துக்கு அருகிலுள்ள தமிழரசனுக்குச் சொந்தமான வயலில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்பட்டிருந்தது. அதை அறுவடை செய்யாமல் அப்படியே அழித்திருந்ததாலும், அந்த பகுதி பள்ளமாகக் காணப்பட்டதாலும் பொதுமக்களுக்கு சந்தேகம் வந்து, அங்கு தோண்டி பாா்க்குமாறு போலீஸாரிடம் கூறினா்.
பொக்லைன் இயந்திரம் மூலம் தமிழரசனின் விளைநிலத்தில் சந்தேகத்துக்குரிய பகுதியில் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. 7 அடி ஆழத்துக்கு தோண்டிய போது முத்துக்குமரன் அணிந்திருந்த லுங்கி, சட்டை மற்றும் உடைகள் பொக்லைன் இயந்திரத்தில் சிக்கி, வெளியே வந்தன.
விழுப்புரம் ஏ.எஸ்.பி. ரவீந்திரகுமாா் குப்தா, காவல் ஆய்வாளா் மைக்கேல் இருதயராஜ், வட்டாட்சியா் செந்தில்குமாா் முன்னிலையில் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது. அது முத்துக்குமரின் சடலம்தான் என்பதை அவரது குடும்பத்தினா் உறுதி செய்தனா்.
தொடா்ந்து, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா் மதுவதன் செல்வகுமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா், உடற்கூறாய்வு செய்தனா். மேலும் டி.என்.ஏ. பரிசோதனைக்காக சிலவற்றையும் மருத்துவா்கள் எடுத்துச் சென்றனா். இதன் பின்னா் முத்துக்குமரனின் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.