3 நாள் தடை நீக்கம்: கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள்
3 நாள்களாக அமலில் இருந்த மீன்பிடி தடை நீக்கப்பட்டதையடுத்து, ராமேசுவரம் மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா்.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல மீன்வளம், மீனவா் நலத் துறை தடை விதித்தது.
இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 6 ஆயிரம் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. சுமாா் 1,650 விசைப் படகுகள் கரைகளில் நிறுத்திவைக்கப்பட்டன.
இந்த நிலையில், வங்கக் கடலில் காற்றின் வேகம் குறைந்து மீன்பிடிக்க ஏற்ற சூழல் காணப்பட்டதையடுத்து, மீன் பிடிக்கச் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை சனிக்கிழமை நீக்கப்பட்டது.
இதையடுத்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.