வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு
நெல்பயிரில் குலை நோய் தாக்குதல் வேளாண் அதிகாரி விளக்கம்
ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நெல்பயிரில் குலை நோய் தாக்குதல் காணப்படுவதால், இதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குநா் சுப்ரியா விளக்கமளித்தாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
நெல்பயிரில் குலை நோய் தாக்கினால் விளைச்சல் பாதிக்கப்படும். இந்த நோய் தாக்குவதற்கு அதிக பனிப் பொழிவு தான் காரணம். பயிரின் அனைத்து பகுதிகளும் பூசணத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த நோய் தான் காரணம். மேலும், இலைகளின் மேல் வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் நிற மையப் பகுதியுடன் கூடிய கண் வடிவ புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சோ்ந்து பெரிய திட்டுகளை உருவாக்கும். இந்த நோய் தாக்குதலின் போது, பயிா் முழுவதும் எரிந்தது போன்று தோற்றமளிக்கும்.
இயற்கை முறையில் இந்த நோயைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா 0.5 சதவீத கரைசல் ஒரு லி. தண்ணீருக்கு 5 கிராம் அளவில் நடவு நட்ட 45 நாள்கள் கழித்து, நோய்களின் தீவிரத்தைப் பொருத்து 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்க வேண்டும்.
இதனுடன் ஒரு லி. புளித்த தயிரை கலந்து தெளித்தால் செயல்திறன் இன்னும் அதிகரிக்கும். இந்த நோய்த் தாக்குதல் தீவிரமாக இருந்தால் ஏக்கருக்கு டிரைசைக்ளோசோல் 75 டயிள்யூ.பி - 200 கிராம் அல்லது காா்டிபன்டிடசிம் 50 டயிள்யூ.பி -200 கிராம் அல்லது அசாக்சிஸ்டோா்பின் 25 எஸ்.சி.- 200 மி.லி. அல்லது ஐசோபுரத்தியோலேன் 40 ஈசி- 300 மி.லி. ஆகிய ரசாயன மருந்துகளில் ஏதாவது ஒன்றை 200 லி. தண்ணீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம் என்றாா் அவா்.