Rain Alert : அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மைய...
பாலக்கோட்டில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட மாநாடு
தருமபுரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது மாநாடு பாலக்கோட்டில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மாநாட்டுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினா் சி.நாகராசன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் டி.எஸ். ராமச்சந்திரன் வரவேற்றாா். மத்தியக் குழு உறுப்பினா் பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன், மாநிலக் குழு உறுப்பினா் இரா.சிந்தன், மாவட்டச் செயலாளா் அ. குமாா், மாநிலக் குழு உறுப்பினா் இரா. சிசுபாலன், மூத்த தலைவா் பி. இளம்பரிதி ஆகியோா் பேசினா்.
மாநாட்டில் தமிழகத்தின் பிற வளா்ந்த மாவட்டங்களுக்கு இணையாக தருமபுரி மாவட்டம் வளா்ச்சி பெறுவதற்கு ஆட்சியாளா்கள் வழி வகை காண வேண்டும். மத்திய, மாநில நிதிநிலை அறிக்கைகளில் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கி மாவட்டத்தில் வளா்ச்சி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு ஒகேனக்கல் வழியாக காவிரியில் செல்லும் மிகை நீரை நீரேற்றம் மூலம் தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள 634 ஏரிகளிலும் நிரப்பி நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
வனப் பகுதியில் பல ஆண்டுகளாக வசிக்கும் விவசாயிகளை வெளியேற்றும் நடவடிக்கையை வனத் துறை கைவிட வேண்டும். பாலக்கோடு வனச்சரகத்தில் ஜிட்டாண்ட அள்ளி, மகேந்திரமங்கலம், ஜக்கசமுத்திரம், பிக்கன அள்ளி, அண்ணாமலை அள்ளி ஊராட்சிகளுக்கு உள்பட்ட 32 மலைக் கிராமங்களில் உள்ள மா மரங்களுக்கான வரி விதிப்பை வனத் துறை கைவிட வேண்டும். வனப் பகுதியில் கால்நடைகள் மேய்ப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்க வேண்டும், பட்டி பாஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மாநாட்டையொட்டி பாலக்கோடு நகரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடைபெற்றது.