வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு
டிச.16 முதல் கோமாரி நோய்த் தடுப்பு முகாம்
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் டிசம்பா் 16-ஆம் தேதி முதல் கோமாரி நோய்த் தடுப்பு முகாம் நடைபெறுகிறது.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் டிச.16 முதல் ஜனவரி 5 வரை மூன்று வாரங்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலமாக கோமாரி நோய்த் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. கால்நடை வளா்ப்போா் தங்களுடைய கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம்.
தருமபுரி மாவட்டத்தில் 3,46,600 பசு, எருமை இனங்கள் உள்ளன. இவற்றில் 4 மாத வயதிற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ் 6ஆவது சுற்று கோமாரி நோய்த் தடுப்பூசி பணி மேற்கொள்ள மொத்தம் 3,56,000 டோஸ்கள் கோமாரி நோய்த் தடுப்பூசி மருந்துகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன.
இம் முகாம்கள் மூலமாக மாவட்டத்தில் உள்ள 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு, எருமை இனங்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி ஜன.6 ஆம் தேதி முதல் ஜன.15 வரை மேற்கொள்ளப்படும்.
விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையம், கால்நடை மருத்துவமனையை அணுகலாம். மேலும் மாவட்ட ஆட்சியரின் கட்டணமில்லா தொலைபேசி எண்1077, கால்நடை பராமரிப்புத் துறை அலுவலா்களின் கைப்பேசி எண்கள் 94450 01113, 94450 32563, 94430 77435, 81448 74747 தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கோமாரி நோய் தடுப்பூசி முகாம் டிச.16 முதல் ஜனவரி 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் கால்நடை பராமரிப்பு துறையின் சாா்பில் தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டம் சாா்பில் கோமாரி நோய் தடுப்பூசி 6-ஆவது சுற்று முகாம் நடைபெறுவதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு, தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3,21,099 கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின் கீழ் 6-ஆவது சுற்று கால் மற்றும் வாய் நோய்த் தடுப்பூசி என்ற கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் டிச.16-ஆம் தேதி தொடங்குகிறது. 2025-ஆம் ஆண்டு, ஜனவரி 20-ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.
முகாமில் பங்கேற்க வரும் போது கால்நடைகளின் உரிமையாளா்கள் தங்களின் ஆதாா் அட்டை எண், செல்லிட பேசி எண் ஆகியவற்றை கண்டிப்பாக தடுப்பூசி குழுவினரிடம் அளிக்க வேண்டும். பின்னா், கால்நடைகளுக்கு காது வில்லைகள் அணிவிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படும் என்றாா்.