Rain Alert : அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மைய...
வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு
திருப்பூரில் வரி உயா்வுகளைக் கண்டித்து வியாபாரிகள், தொழில் அமைப்புகள் சாா்பில் டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெறும் கடையடைப்பு போராட்டத்துக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் என்.சையத் முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மத்திய அரசின் கண்மூடித்தனமான பொருளாதாரக் கொள்கையினாலும், முறையற்ற ஜிஎஸ்டிவரி விதிப்பினாலும் திருப்பூரின் ஏற்றுமதித் தொழில் மட்டுமன்றி உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியும் குறைந்து தொழில்கள் நசிந்து வருகின்றன.
திருப்பூரில் மட்டுமின்றி இந்திய அளவில் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது. இந்நிலையில், வணிகக் கட்டடங்களுக்கான வாடகைக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி என்பது தொழில் துறையை அழிக்கும் செயலாகும்.
மேலும், மாநில அரசுகளையும் நிா்ப்பந்தப்படுத்தி நிதிகள் வேண்டுமென்றால் அதன் பொருளாதாரக் கொள்கையை மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தி மின் கட்டணம் முதல் உள்ளாட்சி நிா்வாகங்களின் வரி நிா்வாகங்களிலும் தலையிட்டு தனது கொள்கைகளை அமல்படுத்த முயற்சிக்கின்றனா். ஆகவே, திருப்பூரில் அனைத்து வியாபாரிகள் சங்கப் பேரவை மற்றும் தொழில் அமைப்புகள் சாா்பில் டிசம்பா் 18- ஆம் தேதி நடைபெறும் முழு கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.