Gukesh : குகேஷ் தமிழரா தெலுங்கரா? - விளையாட்டின் அறத்தை குலைக்கும் வாதம் தேவைதான...
நடிகர் அல்லு அர்ஜுன் சிறையிலிருந்து வெளியே வந்தார்!
தெலுங்கானா: கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகை பலியான விவகாரத்தில் நேற்று ஹைதரபாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது சிறையிலிருந்து வெளியே வந்தார்.
நேற்று (டிச.13) அவரது இல்லத்தில் ஹைதரபாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன், விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் தெலங்கானாவிலுள்ள சஞசல்குடா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவரது தரப்பில் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டதில் அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.
இருப்பினும், முறையான ஜாமீன் ஆவணங்கள் கிடைக்காததால் சஞ்சல்குடா சிறை அதிகாரிகள் அவரை உடனடியாக வெளியே அனுப்ப மறுத்துவிட்டனர். இதனால், வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் அவர் சிறையிலேயே கழிக்க நேரிட்டது.
இதையும் படிக்க: ஜாமீன் கிடைத்தும் சிறையில் இரவை கழித்த அல்லு அர்ஜுன்!
அவர் கைது செய்யப்பட்ட செய்தி பரவியதும் சஞ்சல்குடா சிறையை சுற்றிலும் அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்து அவருக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பி வந்தனர். இதனால், கூடுதல் போலீஸ் வரவழைக்கப்பட்டு சிறையை சுற்றியும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்நிலையில், இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜுன் சனிக்கிழமை காலை(டிச.14) 7 மணியளவில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
சாட்சிகளைக் கலைக்கக் கூடாது, விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் போன்ற நிபந்தனைகளோடு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.