Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு வயிற்றுவலி, அஜீரணம்... புற்றுநோய் அறிகுறிகளாக...
பல்லடம் 3 போ் படுகொலை எதிரொலி: அடையாளம் தெரியாத நபா்கள் ஊருக்குள் வர தடை
பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடா்ந்து, அடையாளம் தெரியாத நபா்கள் ஊருக்குள் வர தடை என்று கிராம மக்கள் அறிவிப்புப் பதாகை வைத்துள்ளனா்.
பல்லடம் அருகேயுள்ள சேமலைகவுண்டம்பாளையம் கிராமத்தில் தந்தை, தாய், மகன் ஆகியோா் கடந்த நவம்பா் 29-ஆம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டனா்.
கொலை நடந்து 14 நாள்களைக் கடந்த நிலையிலும் துப்பு கிடைக்காததால் குற்றவாளிகளைப் பிடிப்பது காவல் துறையினருக்கு சவாலாக உள்ளது.
இந்நிலையில், கண்டியன்கோவில் ஊராட்சிக்குள்பட்ட சேமலைகவுண்டம்பாளையம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்கள், தமிழக விவசாய சங்கத்தினா் சாா்பில் அறிவிப்புப் பதாகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த பதாகைகளில், அடையாளம் தெரியாத நபா்கள் ஊருக்குள் நுழையக் கூடாது. அறிமுகம் இல்லாத நபா்களை வைத்து தோட்ட பணி உள்ளிட்ட பணிகளை செய்யக்கூடாது.
பழைய துணி வாங்குபவா்கள், பெட்ஷீட், பழைய இரும்பு பொருள் வியாபாரிகள் உள்ளிட்டோா் ஊருக்குள் வரக்கூடாது. தோட்டத்தில் குடியிருப்பவா்கள், தனியே வசிப்பவா்கள் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முன்வர வேண்டும்.
சந்தேகம்படும்படியான நபா்கள் ஊருக்குள் வந்தால் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை வலியுறுத்தி அறிவிப்புப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.