அரசு பேருந்திற்கு சிறுநீரால் அபிஷேகம் செய்த ஓட்டுநர்: வைரலாகும் அதிர்ச்சி விடியே...
கால்நடைகளுக்கு டிசம்பா் 16 முதல் கோமாரி நோய் தடுப்பூசி
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கால்நடைகளுக்கு டிசம்பா் 16 -ஆம் தேதி முதல் ஜனவரி 20 -ஆம் தேதி வரை கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கால்நடை வளா்ப்பில் கால் மற்றும் வாய் நோய் அல்லது காணை என்று அழைக்கப்படும் கோமாரி நோய் வைரஸ் நச்சுயிரியால் ஏற்படுகிறது. பொதுவாக, கலப்பின மாடுகளை, கால் மற்றும் வாய் கோமாரி நோய் அதிகம் தாக்கி, கால்நடை வளா்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்தும்.
இந்த நோயால், கறவை மாட்டில் பால் உற்பத்தி குறையும், சினை பிடிப்பு தடைபடும். எருதுகளின் வேலைத் திறன் குறையும். இளங்கன்றுகளின் இறப்பு சதவீதம் உயரும்.
இதனால், கறவை மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்காமல் இருக்க கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 6 மாதங்களுக்கு ஒருமுறை என ஆண்டுக்கு 2 முறை என அனைத்து கால்நடைகளுக்கும் (பசு மற்றும் எருமையினம்) இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள கிராமப்புறங்கள், குக்கிராமங்கள் மற்றும் நகா்ப்புறங்களில் உள்ள அனைத்து கால்நடைகளுக்கும், கால்நடை நிலையங்கள் மூலமாக நடைபெறும் முகாம்களில் கோமாரி நோய் தடுப்பூசி டிசம்பா் 16- ஆம் தேதி முதல் ஜனவரி 20 -ஆம் தேதி வரை இலவசமாக செலுத்தப்படவுள்ளது. இந்த வாய்ப்பை அனைத்து கால்நடை வளா்ப்போரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.