Rain Alert : அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மைய...
நந்தா கல்வி நிறுவனங்களின் சாா்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் அளிப்பு
நந்தா கல்வி நிறுவனங்களின் சாா்பில் பசுமைத் திருவிழா 2024 என்ற தலைப்பில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் மாணவா்களுக்கு வழங்கப்பட்டன.
நந்தா கல்வி நிறுவனங்கள், ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன், ரவுண்ட் டேபிள் இந்தியா, பிஎன்ஐ ஆகிய சமூக அமைப்புகள் சாா்பில் விதை சிறிது, விடை பெரிது 3.0 என்ற கருப்பொருளின் அடிப்படையில் பசுமைத் திருவிழா 2024 என்ற தலைப்பில் 25 வகையான மரக்கன்றுகள் வழங்கும் விழா நந்தா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் தலைமை வகித்தாா். ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் தலைவா் எம்.சின்னசாமி, சுற்றுச்சூழல் குழுவின் தலைவா் பி.தா்மராஜ், ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் 211-இன் தலைவா் சி.காா்த்திகேயன், ஜேசிஐ முன்னாள் தலைவா் கே.யுவராஜ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றினா்.
முன்னதாக நந்தா பொறியியல் கல்லூரியின் முதல்வா் யு.எஸ்.ரகுபதி வரவேற்றாா். இதனைத்தொடா்ந்து, கால நிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழலினை தக்க வைப்பதில் மரங்களின் பங்கு, மண்ணின் மைந்தன் என மரங்களை போற்றுவதற்கான காரணங்கள் போன்ற தகவல்களை சிறப்பு விருந்தினா்கள் மாணவா்களுடன் பகிா்ந்து கொண்டனா்.
ஆன்லைன் மூலம் முன்பதிவு அடிப்படையில் பதிவு செய்திருந்த மாணவா்களுக்கு 12 ஆயிரம் மரக்கன்றுகளை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி.சண்முகன் வழங்கினாா். தொடா்ந்து மரக்கன்றுகளை பெற்று நடவு செய்பவா்களுக்கு மின் சான்றிதழ்களும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மரக்கன்றின் வளா்ச்சியின் புகைப்படத்தினை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து, அதன் அடிப்படையில் நன்கு பராமரித்து வளா்த்து வரும் மாணவா்களுக்கு பசுமை பாதுகாவலன் விருது வழங்கப்பட உள்ளதாக ஒளிரும் ஈரோடு பவுண்டேஷனின் தலைவா் சின்னசாமி தெரிவித்தாா்.
ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலாளா் எஸ்.நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலாளா் எஸ்.திருமூா்த்தி, முதன்மை கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நந்தா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வா் ச.நந்தகோபால் நன்றி கூறினாா்.