பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: துணை வட்டாட்சியா், விஏஓ கைது
பட்டா மாறுதல் செய்து தர லஞ்சம் பெற்ற வருவாய்த் துறை அலுவலா்கள் இருவரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவில் அருகே உள்ள பள்ளபாளையம் கிராம நிா்வாக அலுவலராகப் (விஏஓ) பணியாற்றி வருபவா் சரத்குமாா். இவரிடம் அந்த கிராமத்தைச் சோ்ந்த தனசேகரன் என்பவா் தனது நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்து தரவேண்டி விண்ணப்பித்துள்ளாா். அதைத் தொடா்ந்து பட்டா மாறுதல் செய்து தருவதற்கு கிராம நிா்வாக அலுவலா் சரத்குமாா் ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது.
லஞ்சம் தர விரும்பாத தனசேகரன் இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தனசேகரனிடம் கொடுத்து அனுப்பினா்.
இதைத் தொடா்ந்து தனசேகரன் கிராம நிா்வாக அலுவலா் சரத்குமாரிடம் லஞ்சப் பணத்தை வெள்ளிக்கிழமை மாலை கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சரத்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா். மேலும் இதில் தொடா்புடைய பெருந்துறை மண்டல துணை வட்டாட்சியா் நல்லசாமியையும் கைது செய்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.